பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருட்டுக் கை

123,



"நீ இங்கே வருவதற்கு முன்பே நான் பழகுகிறேன். அம்மாவிடம் நல்ல பேர் எடுத்திருக்கிறேன். நீ இன்றைக்குப் பெரிய திருட்டைக் கண்டுபிடித்தாயாக்கும் இத்தனை பொம்மைக் குவியலில் இந்த ஒன்று குறைந்தால் என்ன குடி முழுகிப் போய்விடும்? நீதான் இந்த வீட்டுச் சொத்தைக் காப்பாற்றப் பிறந்திருக்கிறாயோ?” என்று கேட்டாள் பாக்கியம். -

இல்லை; இல்லை. நீதான் இந்த வீட்டுச் சொத்துக்கு மகளாகப் பிறந்திருக்கிறாய்! இவ்வளவு வயசாகியும் உனக்குப் புத்தி இல்லையே! எனக்கு முன்பிருந்தே இங்கே இருக்கிறாய் என்று சொல்கிறாயே! அம்மாவிடம், எனக்கு இது வேண்டும் என்று சொல்லி வாங்கிக் கொள்ளக்கூடாதோ? அதை எடுத்துப் பையில் எதற்காக ஒளித்து வைக்க வேண்டும்?'

'சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதற்குள் நீதான் போலீஸ் புலிபோலத் திருட்டைக் கண்டு பிடித்துவிட்டதாகத் தடபுடல் பண்ணுகிறாயே!”

"இந்தா அம்மா, அதிகமாகப் பேசாதே. செய்த தப்பை ஒப்புக்கொள். அம்மாவிடம் கேட்டு வாங்கிக் கொள்பவளாக இருந்தால் உன் பையில் எடுத்து மூலையிலே மறைவாக வைத்திருக்க வேண்டியதில்லை. திருடினது போதாதென்று, அது சரி என்று சமாதானம் வேறு சொல்ல வந்துவிட்டாய். இன்னும் என்ன என்ன சாமான முன்பு எல்லாம் எடுத்துக்கொண்டு போனாயோ?” -

"என்ன அது? இனிமேல் பேசினால் எனக்குக் கெட்ட கோபம் வரும். நேற்றுப் பிறந்த பயல், நீ என்னை அதிகாரம் பண்ணுவதாவது' என்று அவள் சீறினாள். வார்த்தைகள் தடித்தன. பேச்சுப் பலமாயிற்று. அதைக்கேட்டு, "என்னடா அங்கே ரகளை?" என்று சொல்லிக்கொண்டே எசமானியம்மாள் வந்தாள்.