பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரியின் மூக்குத்தி

9

மான கல்லை உலகில் இல்லை என்று மாத்திரம் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்."

மன்னனுடைய ஆவலைத் தொண்டைமான் தூண்டி விட்டான். "சொல்லுமே, என்ன சொல்லப் போகிறீர்? வைரத்தில் ஏதாவது குற்றம் இருக்கிறதென்று சொல்வீர்? இது பரம்பரை பரம்பரையாக இந்த அரண்மனைச் சொத்தாக இருந்து வருகிறது. குற்றமற்றது என்று பரீட்சை செய்தே என் முன்னோர்கள் வாங்கியிருக்கிறார்கள். நீர் குற்றம் உடையது என்றால் இது குறைந்துவிடுமா?" என்றான் அரசன்.

"மன்னர் பிரான் சொன்னதில் உண்மை இல்லாமல் போகவில்லை. ஆனால் நான் சொல்லும் குற்றம் மற்றவர் சொல்வது போன்றது அன்று. இது வைரத்தை உண்டாக்கும் என்று முன்பு சொன்னேனே, அதைத்தான் மறுபடியும் சொல்லுகிறேன்."

"யாரிடம் வைரம் உண்டாகும்? ராணியின் மூக்குத்தியைக் கண்டு யார் வைரம் கொள்வார்கள்? இவ்வளவு காலமாக அப்படி ஒன்றும் நேரவில்லையே?’

"மகாராஜா, என்னுடைய துணிச்சலைப் பொறுத்தருள, வேண்டும். இந்த மூக்குத்தியின் மேல் அயல் நாட்டுக் காற்று வீசாமல் இருக்கிற வரைக்கும் ஆபத்து ஒன்றும் இல்லை. அயல் நாட்டுக் காற்று வீசினால், அதாவது இதைப் போட்டுக்கொண்டு கலிங்க நாட்டின் எல்லையை விட்டுத் தாண்டினல், நான் சொன்னபடி வைரம் உண்டாகும்.”

“என்ன ஐயா புரளி பண்ணுகிறீர்? உலகம் என்ன, கொள்ளைக்கார ராஜ்யமா? ஊரை விட்டுப் போனால் பறி போய் விடும் என்று சொல்கிறீரே; நாங்கள் சில மாதங்களுக்கு முன்புதான் சோழநாட்டுக்கும் பாண்டி நாட்டுக்கும் போய் வந்தோம். சுகமாகவே வந்து சேர்ந்தோம். நீர் சொன்ன வைரத்தை நான் காணவில்லையே!”