பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கீரைத் தண்டு

27

வேண்டுமா என்ன? விசாகனுடைய வீட்டின் மூன்று புறமும் திறந்தவெளி. மனையை வாங்கினவர்கள் இன்னும் வீடுகட்டவில்லை. முன் பக்கத்தில் ரோடு. ரோட்டுக்கு எதிரே யாருடைய மனையிலோ சின்னத்தம்பி குடிசை கட்டிக் கொண்டிருந்தான்.ரிக்க்ஷா இழுக்கும்தொழிலில்வருமானம்போதவில்லை யென்று வேறு என்னதொழில் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். ஆட்டுக் குட்டி வாங்கி வளர்க்கலாம் என்று தோன்றியதும், அவன் வாங்கி வளர்த்ததும் நியாயந்தானே? விசாகன் கீரைப் பாத்தி போட்டுக் கீரையை வளர்த்தது எவ்வளவு நியாயமோ, அவ்வளவு நியாயம் அவன் ஆடு வளர்த்ததும்.

ஆட்டுக்குட்டியும் வளர்ந்து வந்தது; கீரைத் தண்டுகளும் வளர்ந்து வந்தன. முதலில் ஆட்டுக்குத் தன் எசமானன் வீடு இன்ன தென்று பழகுகிறவரைக்கும் சின்னத் தம்பியின் மகன் அதைக் கயிற்றால் கட்டித் தானே கொண்டு மேய்த்து வந்தான். 'இதற்கு வீடு அடையாளம் தெரிந்துவிட்டது. எங்கே போனலும் திரும்பி வந்துவிடும்' என்ற நிலை வந்தது. சின்னத்தம்பி ஆட்டுக்குட்டியை அதன் மனம் போனவாறே அவிழ்த்துவிட்டான்.

இப்போதுதான் சங்கடம் தலைகாட்டியது. ஆட்டுக் குட்டிக்கு அல்ல; சின்னத்தம்பிக்கும் அல்ல. விசாகனுக்குத்தான்; உண்மையைச் சொல்லப் போனால் அவன் வீட்டு கீரைத் தண்டுக்கென்றே சொல்ல வேண்டும். நேர் எதிர் வீட்டில் தளதள வென்றுவளர்ந்துவரும் கீரையின் மேல் ஆட்டுக்குட்டி கண் வைத்து விட்டது. வாசல் பக்கத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் கம்பம் நட்டு முள் கம்பியால் வேலி, கட்டியிருந்தார்கள். அந்தக் கம்பிகளுக்கு இடையே எதுவும் நுழைய முடியாது என்பது வேலி கட்டினவர்களின் எண்ணம்.ஆட்டுக்குட்டியின் ஆசையும் முயற்சியும் வேறுவிதமாக இருந்தன.