பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழலின் குரல்

39

முழங்கிய குரல் சிங்கத்தின் கர்ஜனையைப் போல இருக்கும்.அவள் எதிர் கூவியகுரலோ இருதயத்துக்குள்ளே சென்று புகும்.அதில் ஓர் இனிமை நிலவும்.

இரண்டு குரலும் மலைச்சாரலில் ஒன்றை யொன்று தழுவி எதிரொலிக்கும். அது மறைவதற்குள் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.அப்புறமும் ஓர் ஒலி-இரட்டை ஒலி-கேட்கும்.அவளே அவன் தேடிக் கூவிய குரல் அன்று; இருவரும் இணைந்து ஒன்று பட்ட போது உண்டாகும் சிரிப்பொலி. கச்சேரியின் இறுதியிலே தாளவாத்தியங்கள் சேர்ந்து ஒர் ஆவர்த்தம் வாசித்தது போல இருக்கும், அந்த இணைந்த ஒலி. அந்தச் சிரிப்பிலே தாளக் கட்டு இருக்கும்; ஒலியே நடனமிடும். அவர்கள் உள்ளம் ஒன்றி மகிழும் இன்ப நடனத்தின் புறத்தோற்றம் அது; ஒட்டும் இரண்டுளத்தின் தட்டு அது.

அவன் கடித்த பாதிக் கனியை அவள் சுவைத்து உண்ணுவாள். அவள் கடித்த பாதிக் கனியை அவன் உண்ணுவான். ஒருநாள் இருவருக்கும் இடையே ஒரு விவாதம் எழுந்தது; சிறு பூசலாக மாறியது. அது இல்லா விட்டால் காதல் 'கனியும் கருக்காயும்' போன்றது அல்லவா? ஒரு பழத்தைஅவன்வைத்திருந்தான். "நீ அதைப் பாதி கடித்துத் தின்றுவிட்டுத் தா” என்றாள் அவள்."நான் மட்டும் முழுப்பழத்தைக் கடிப்பேனா? நீ கடித்துத் தந்த தைத்தான் நான் தின்பேன்" என்றான் முருகன். அப்படியானால் இருவரும் ஒன்றாகத் தின்போம் என்று முடிவு கட்டினர்கள்.

ஒரே சமயத்தில் ஒரு கனியை எப்படி இருவரும் கடித்துத் தின்பது? எதிரும் புதிருமாக நின்று கடித்தார்கள். பறிக்காமல் மரத்தில்இருந்தபடியே கடித்துப் பார்த்தார்கள்.அப்படியும்முடியவில்லை. உடனே ஒரு தந்திரம் செய்தான். பழத்தை எடுத்துக்கடித்தான்.அவள்கையில்கொடுத்தான். ஆனால் தான் கடித்ததைத் துப்பிவிட்டான்.