அவள் குறை
59
"வேலு விஷயத்தில்தான்."
"வேலு விஷயமா? அவனுக்கு இப்போதுதானே செலவு செய்து கல்யாணம் பண்ணி வைத்தேன்? சம்பளமும் கூடப் போட்டிருக்கிறேன். அவனுக்கு என்ன குறை”
"அவனுக்கு அல்ல; அவளுக்கு!"
"அது யார் அவள்?"
"அவனைக் கட்டிக்கொண்டாளே, அந்தப் பெண் தான்.”
ராஜாராம் தம் மனைவியைக் கூர்ந்து பார்த்தார்.
"சொல்லுவதைத் தெளிவாகச் சொல்” என்றார்.
"நேற்று அந்த பெண் இங்கே வந்திருந்தாள். நவராத்திரிக் கொலுவைப் பார்க்க வந்தேன் என்றாள். பிறகு, யோகஷேமம் விசாரித்தேன்; அவள் மனசுக்குள் இருக்கிறது குறிப்பாக எனக்குத் தெரிந்தது."
"வேறு எங்கேயாவது கணவன் வேலைக்குப் போக வேண்டும் என்று இருக்கிறதோ, அவளுக்கு?’ என்று ராஜாராம் கேட்டார்.
"அவசரப்படாமல் கேளுங்கள்; சொல்கிறேன். 'அம்மா, எனக்கு உங்கள் வீட்டோடே ஒரு குடிசை போட்டுத் தந்து விடுங்கள்; நான் இங்கே வந்து விடுகிறேன். உங்கள் வீட்டில் ஏதாவது வேலை செய்கிறேன்" என்றாள். அவள் தகப்பன் ஏதாவது சொன்னானா என்று கேட்டேன். அவள் பேச்சில் உண்மையை வெளிவிட வில்லை. நானும் பெண்தானே? தெரிந்து கொண்டேன்."
"தெரிந்ததைச் சட்டென்று சொல்” என்றார் ராஜாராம்.
"வேலுவுக்குக் கல்யாணம் செய்து வைத்தீர்கள். அது நல்ல காரியந்தான். கல்யாணம் பண்ணுவதற்கு முன்னால் அவன் ராத்திரியும் பகலும் இங்கேயே கிடந்தான். அப்போதெல்லாம் அப்படி இருந்தது சரிதான். இப்போது: