பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

குமரியின் மூக்குத்தி

அவன் கொடுத்துச் சென்ற ஆயிர ரூபாய் அவர் முன் கிடந்தது. அவருக்கு இப்போது அதைத் தொடவும் அருவருப்பாக இருந்தது. எப்படியோ அதை எடுத்துவைத் தார் பெட்டியில். சாஸ்திரியார் வீட்டுக்கு ஆள் அனுப்பி, வந்துவிட்டாரா என்று விசாரித்தார். வந்தது தெரிந்து தம்முடைய அன்புக் காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.

சாஸ்திரியார் வீட்டுக்குப் போய் அட்டைப் பெட்டியிலிருந்து அம்பிகையை ஒரு பீடத்தில் எடுத்துவைத்தார் கலைஞர். அதைக் கண்டவுடன் சாஸ்திரியாருக்கு உடம்பு புல்லரித்தது. சாஷ்டாங்கமாக விழுந்து அதை நமஸ்கரித்தார். எழுந்தவர், என்ன தோன்றிற்றோ, கலைஞர் காலில் விழப் போனர். "என்ன சாமி இது நான் பாவி! எனக்கா நமஸ்காரம்?" என்று சொல்லிக்கொண்டே அவர் காலில் விழுங்தார் கலைஞர். -

"நீ தெய்வாம்சம் பெற்றவன், அப்பா. அம்பிகையை உன் அகக்கண் தரிசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி அமையாது” என்று சொல்லும்போதே சாஸ்திரியார் கண் நீரைக் கக்கியது.

எழுந்த கலைஞருக்கு ஏதோ படபடவென்று வந்தது. விடை பெற்றுக்கொண்டு வீடு சென்றார். சென்று படுத்து, விட்டார். ஜூரம் வந்துவிட்டது. மூன்று நாள் அகாத ஜூரம் அப்போது, "ரூபாய், பாவி, பணப்பேய்!” என்று என்ன என்னவோ பிதற்றினர். சாஸ்திரியார் அவரை வந்து பார்த்துப் போனார். வீட்டில் உள்ளவர்கள், "அப்போதே சொன்னோமே! கேட்டீர்களா?"என்று அங்கலாய்த்தார்கள்.

நான்காவது நாள் அவருக்குச் சிறிதே குணமாயிற்று. எழுந்தார்; சாஸ்திரியார் வீடு சென்று பார்த்தார். அங்கே அம்பிகை உலக மாதா, சாஸ்திரியாருடைய பூஜையில் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தாள். "உன் படைப்பைப் பார்த்தாயா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர்