உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்


"ஆமாம்! நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. குமாஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக் கதையில் வரும் குமாஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள், தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல. நான் அதேவிதமான கொடுமையால் சாகவில்லை. ஒருவனை, என் ஆசை நாயகனை, சாகடித்தேன். நாடகத்திலே பரிதாபத்திற்குரிய சீதா தற்கொலை செய்து கொள்கிறாள். நான், பழி பாவத்துக்கு அஞ்சாதவள், கொலை செய்தேன். என்னைத் தண்டிக்கத் தயாராக உள்ள நீதிபதியே தாராளமாகத் தண்டியுங்கள். ஆனால் தண்டிப்பதன் மூலம், நீங்கள் இந்த ஒரு காந்தாவை அடக்கலாம். இதே நேரத்திலும், இனியும் தோன்ற இருக்கும் காந்தாக்களைத் தடுக்க என்ன செய்வீர்? பிளேக் வந்தவனுக்கு ஊசி போட்டுவிட்டால், ஊரிலே வேறு யாருக்கும் பிளேக் வராது என்று கூறிவிட முடியுமா? இந்தக் காந்தாவைக் கொன்றுவிட்டால், இனி வேறு காந்தா கிளம்பமாட்டாள் என்றா எண்ணுகிறீர்கள்?

என் இளவயதில் நான் தூக்குமேடை ஏறவேண்டுமே என்று எனக்குப் பயமுமில்லை, துக்கமுமில்லை. என்னைப் பற்றி ஊரார் ஏசுவார்களே என்று வெட்கமுமில்லை. அந்த உணர்ச்சிகள் என்னை இப்போது அண்டுவதில்லை. மரத்துப் போன மனம் என்னுடையது. உளுத்துப் போன நியதிகளை நீதியாகக் கொண்ட உலகம் இது.

ஏனய்யா, இப்படி விறைத்துப் பார்க்கிறீர், கவலையா? எனக்கு மரண தண்டனை தரவேண்டுமே, என் செய்வது? அறியாத பெண்ணாயிற்றே. இவளைச் சாகச் சொல்வதா என்று சோகமா உமக்கு? பாவம்! நான் உயிரோடு இருப்பதாகவா கருதுகிறீர்? நான் இறந்து பத்தாண்டுகள் கிட்டத்தட்டவாகிவிட்டன. கள்ளங் கபடமற்ற காந்தா பன்னெடு நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்டாள். இந்தக் காந்தா, பழி வாங்கும் பேர்வழி.