உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அறிஞர் அண்ணா



வழக்கை வளர்த்திக் கொண்டிருக்க வேண்டாம். சோமுவை நான்தான் கொன்றேன். கழுத்தைத் திருகினேன், அவன் இறந்தான். சாகும்போதுகூட நான் அவனை அணைத்துக் கொண்டிருந்தேன். அவனை மட்டும் நான் கொல்லாது போயிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? சோமு ஒரு கொலைகாரனாகி நின்று கொண்டிருப்பான். நான் அவனுக்குக் கடைசியாகச் செய்த உதவி, அவனைக் கொன்றேனே அதுதான். பத்தாண்டுகளுக்கு முன்பு சோமு என்னைக் கொன்றான். இப்போது நான் அவனைக் கொன்றேன்; அவனுக்கு உதவி செய்தேன்.

ஏன் விழிக்கிறீர்கள்? நான் உளறுவதாக நினைக்கிறீர்கள்? அப்படித்தான் எண்ணுவீர்கள், சகஜம். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை நானே எழுதி வைத்திருக்கிறேன். அது கிடைத்தால் என் மரணத்துக்குப் பிறகு அதைப் படியுங்கள், விஷயம் விளங்கும், போதும் நான் உலகில் வாழ்ந்தது. விடை கொடுங்கள், செல்கிறேன், முதலில் என்னைத் தண்டித்து விடுங்கள். உங்கள் வேலை முடியட்டும். பலருடைய ஆசையும் நிறைவேறட்டும்.

சோமு என்ற தனது "ஆசை நாயகனை"க் கொன்றதாக, காந்தா என்ற மாது குற்றஞ் சாட்டப்பட்டு, சென்னைக் கோர்ட்டிலே விசாரணை நடந்தது. காந்தாவுக்கு வயது இருபத்தைந்து அல்லது இருபத்தாறு இருக்கும். அழகி, ஆனால் கொலைகாரி! அதற்கு ஏராளமான ருசு கிடைத்துவிட்டது, தண்டனை நிச்சயம், என்று இந்த வழக்கைக் காண வந்திருப்பவர்கள் பேசிக் கொண்டனர். கோர்ட்டிலே காந்தா, பயமோ, பதைப்போ, துக்கமோ, துடிப்போ, இல்லாமல் மிக அமைதியாக இருந்ததைக் கண்ட நீதிபதி, வக்கீல் முதலானவர்கள், தூக்கு மேடைக்குப் போவோம் என்று தெரிந்தும், இவளுக்கு இவ்வளவு தைரியம் எப்படி பிறந்தது என்று எண்ணி ஆச்சரியமடைந்தனர். பல சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட பிறகு, குற்றவாளி ஏதாகிலும் கூறவேண்டியது இருக்கிறதோ என்று நீதிபதி கேட்டார். அப்போது காந்தா பேசியது, மேலே நாம் விவரித்தது. கோர்ட்டாருக்கோ, வேடிக்கைக் காண வந்தவர்களுக்கோ,