உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

11



காந்தா பேசியதின் பொருள் விளங்கவில்லை. தூக்குத் தண்டனை விதிப்பார்கள் என்று கிலி பிடித்துக் கொண்டதால், காந்தாவின் மூளை குழம்பி விட்டதென்றும், பைத்தியம் பிடித்ததாலேயே, ஏதேதோ உளறினாளென்றும், கோர்ட்டில் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மையில் காந்தாவுக்குப் பைத்தியமுமில்லை, மனக் குழப்பமுமில்லை. மிகத் தெளிவாகவே இருந்தாள். காந்தாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கமான சடங்குகளுக்குப் பிறகு காந்தா தூக்கிலிடப்பட்டாள்.

காந்தாவின் கதி கண்டு வருந்தினவர்கள் யார்? அவளது தங்கை சாந்தாவும், அவளது காதலன் சங்கரனுந் தவிர வேறுயாரும் வருந்தவில்லை.

விபசாரி! கொலைகாரி! குலத்தைக் கெடுத்தவள்! மிராசுக் குடும்பத்தை அழித்தவள்! சோமுவைக் கொலை செய்தவள்! — என்று பலர் பல விதமாகத் தூற்றினார்கள். காமத்துக்குப் பலியான சோமுவின் பரிதாபச் சிந்து காலணா என்றும், கொலைகார காந்தாவின் கோரமரணம் என்றும் பாட்டுப் புத்தகங்கள் விற்கப்பட்டன. பத்திரிகாசிரியர்கள் விபசாரத்தால் வந்த வினை என்று தலையங்கங்கள் எழுதித் தீர்த்தனர்.

வழக்கும் தூக்கும் வம்பளப்பும் முடிந்து சில நாட்கள் சென்றபிறகு. சாந்தாவும் சங்கரனும் சென்னையை விட்டு வெளியேறி, கலியாணம் செய்து கொண்டு, ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களிருவருக்கு மட்டுமே காந்தாவின் பரிதாப வரலாறு முழுவதும் தெரியும். 'காந்தாவின் டைரி' அவர்களிடந்தான் இருந்தது.

சங்கரன் காந்தாவின் டைரியைப் புத்தகமாகப் பிரசுரிக்கத் தீர்மானித்தான். உலகில் மறுபடியும் காந்தாவைப் பற்றித் தாறுமாறாகப் பேசுவார்களே! எதற்காக அத்தகைய வம்பளப்புக்கு இடமளிக்க வேண்டும், 'புத்தகம் போடக் கூடாது' என்று சாந்தா கூறினாள். "சாந்தா! உலகத்தார் காந்தாவைத் தூற்றினாலும் கவலையில்லை. அவளது வாழ்க்கை வரலாற்றைப் படித்து ஓரிருவராவது பாடம் கற்றுக் கொண்டால் போதும். மேலும், விஷயத்தைப்