உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அறிஞர் அண்ணா



முட்டாளே! அவன் காரியம் மகா பிசகு" என்று அப்பா வாதாடினார். சாந்தா தூங்கி விட்டாள். எனக்கோ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த பேச்சு பயத்தை உண்டாக்கிவிட்டது. என்னை அழைத்துக் கொண்டு போகப் படு கிழவன் வருவதாகவும், நான் பயந்து கொண்டு அப்பாவிடம் ஓடுவது போலவும் கனவு கண்டேன். மறுதினம் காலையில் எழுந்ததும், வாசலில் நின்று கொண்டு தெருவை நோக்கினேன். எதிர் வீட்டில் ஒரு சுந்தர வாலிபன் நின்று கொண்டிருக்கக் கண்டேன்.

நெடு நாட்களுக்கு முன்பே கல்கத்தா சென்றிருந்த அலமு, தன் கணவனை இழந்துவிட்டு மகனுடன் ஊர் திரும்பி எங்கள் வீட்டு எதிர் வீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு, அதில் குடியேறினாள். அவள் வரப் போகிறாள் என்பது எனக்கு முன்னாலே தெரியும். அவள் பிள்ளைக்குத் தலை சீவிச் சடை போட்டுப் பொழுது போக்கலாம் என்று நான் எண்ணியதுண்டு. ஆனால், அலமுவின் மகன் நான் எண்ணிக் கொண்டிருந்தபடி சிறிய அம்பியல்ல! அலமுவின் பிள்ளைதான், நான் நாடகம் போய்வந்த மறுதினம் காலையில் என் கண்களுக்குக் காட்சி அளித்தது. நான் தொட்டு விளையாட முடியாத பருவம். என் கிட்ட வரமுடியாத வயது. ஏறக்குறைய இருபது இருக்கும் என்கிட்டே அந்த சுந்தர ரூபன் வர முடியாது என்று கூறினேனல்லவா! அவன் என்ன செய்தான் தெரியுமோ! யாரது புதிதாக இருக்கிறதே என்று நான் பார்த்தேனோ இல்லையோ, ஒரே தாவாகத் தாவி என் நெஞ்சில் புகுந்து கொண்டான். அந்த உருவம் எதிர் வீட்டு வாசற் படியண்டைதான் இருந்தது. ஆனால், என் நெஞ்சிலே சித்திரம் பதிந்துவிட்டது. சுந்தரமான அவனது பெயர் சோமசுந்தரம். அலமு அதிர்ஷ்டக்காரி என்று அடிக்கடி அம்மா என்னிடம் கூறுவதுண்டு. அலமுவுக்கு ஐசுவரீயம் இருக்கு என்பதால் நான் நாக்கைத் தட்டுவது வழக்கம். ஐசுவரீயம் இருக்கட்டுமே அவளிடம், அதனால் நமக்கென்ன என்று கூறுவதுண்டு. ஆனால், இப்படிப்பட்ட மைந்தனை அலமு பெற்றிருப்பது எனக்கென்ன தெரியும். அந்தச் செல்வத்தை நான் பெற வேண்டும் என்று, பார்த்ததும்