உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

17



எண்ணினேன். முன்னாளிரவு நான் கண்ட நாடகத்தால் பல எண்ணங்கள் என் மனதிலே உதித்தன. அதிலே முக்கியமானது கருத்துக்கிசைந்த மணாளனைப் பெற வேண்டும் என்பதுதான். அதே எண்ணத்தை அணைத்துக் கொண்டுதான் முன்னாள் இரவு நான் தூங்கினேன். காலையிலே எழுந்ததும் என் கண்களில் சோமசுந்தரம் தென்பட்டால், எனக்கு எப்படியிருக்கும்! நீங்களே யோசியுங்கள். பசியோடு உலவும் ஒருவன் பட்சணக் கடையருகே வருகையில், கமகமவென வாசனை வீசினால் நாக்கில் நீர் ஊறாதா! நான் இதோ வெளிப்படையாகக் கூறுவதைப்போல பல பெண்கள் கூறமாட்டார்கள். ஆனாலும் நான் மயங்கினதைப் போல மயங்காத பெண்கள் எத்தனை பேர் இருக்க முடியும்? அந்த மரக் கட்டைகளைப் பற்றிப் பேசுவானேன்?

இவ்வளவையும் எண்ணிக்கொண்டு நான் சோமசுந்தரத்தைப் பார்த்தபடி நின்று கொண்டேயிருந்தேன், என்று எண்ணுகிறீர்களா, அதுதான் இல்லை. ஒரு முறை பார்த்தேன். தலை குனிந்து கொண்டே யோசித்தேன். யாராக இருக்கும் என்று. அலமுவின் மகன் என்ற யோசனை தோன்றிற்று. மறுபடி ஒரு முறை பார்த்தேன். அதற்குள் அம்மா சொன்னார்கள். "காந்தா! அவன் அலமுவின் பிள்ளை" என்று. உடனே நான் வேறு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டேன்.

அலமுவும் எங்கள் அம்மாவும் பாலிய சிநேகிதமாம். ஆகவே, அடிக்கடி அவர்கள் வீட்டு விஷயங்களைப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்க ஆரம்பித்தது. முதலிலே அம்மாதான் ஏதாவது பேச ஆரம்பிப்பார்கள். அந்தச் சுவாரஸ்யமான பேச்சை நான் முடிக்க விடுவதில்லை, கேள்வி மேல் கேள்வி போடுவேன். அது எப்படி, இது எப்படி என்று விசாரிப்பேன் இப்படிப் பேசிப் பேசிச் சோமசுந்தரத்தைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

சோமசுந்தரம் பெயருக்கேற்ற ரூபவான். தங்கமான குணம், நல்ல படிப்பு. இளமை, இவ்வளவும் ஒருங்கே பொருந்தியவன். எவள் 'கொடுத்து வைத்திருக்கிறாளோ'