உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அறிஞர் அண்ணா



அவரது மனைவியாகி மகிழ்ச்சியோடு வாழ, கைக்கு எட்டாத கனியானாலும், நினைப்புக்கு எட்டாமற் போகுமா? அதுபோல் எனக்குச் சோமுவின் மீது எண்ணம் விழுந்தது. இத்தகைய மணாளன் கிடைத்தால் மகிழ்ச்சியோடு வாழலாம். உலகில் எதற்குப் பிறந்தோம், சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே! ஆனால் சுந்தரம் என்னைக் கண்டு ஆசைப்பட்டாலும் என் வறுமையைக் கண்டால் பயப்படுவார். கதைகளிலே வருவதுபோல், ஏழைப் பெண்ணாக இருந்தாலும் எனக்கு அவள் தான் வேண்டும் என்று சொல்லி என்னைக் கலியாணம் செய்து கொண்டால், எவ்வளவு இன்பமான வாழ்வு எனக்குக் கிடைக்கும். எனக்கு அந்த வாழ்வு கிடைத்தால் என் தங்கை சாந்தாவுக்கு எப்படிப்பட்ட மேலான இடத்திலே வரன் தேடுவேன் தெரியுமா? எங்கள் வறுமை ஓடியே போகும். வாட்டம் தீர்ந்து விடும் — இத்தகைய எண்ணங்கள் அலைபோல் மனதில் மோதும். எப்படியோ நான் ஒரு இன்ப மாளிகையை என் மனதில் கட்டி விட்டேன்.

என் தங்கை சிறு பெண்ணாகையால் அடிக்கடி அலமு அத்தையிடம் போய்ப் பேசுவாள். தோட்டத்திற்குச் சென்று விதவிதமான மலர்களைக் கொண்டு வருவாள். அலமுவும் சாந்தாவிடம் அன்பாக இருக்கவே. இந்தத் தொடர்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் சோமு என்னைப் பற்றி ஏதாவது பேசாதிருப்பதில்லையாம். அதை அப்படியே சாந்தா வீட்டில், 'பிளேட்' வைப்பாள். சாந்தா கூறுவதைக் கேட்க எனக்குப் பரமானந்தமாக இருக்கும். அப்பா பெருமூச்செறிவார், அம்மா "அகிலாண்டேஸ்வரியின் கிருபை எப்படியோ, யார் கண்டார்கள்" என்று உருக்கமாகச் சொல்லுவார்கள். சாந்தா குறும்புப் பார்வையுடன் என்னை நோக்கிச் சிரிப்பாள். அவளுடைய கன்னத்தை நான் நோகாதபடி கிள்ளுவேன். இந்த ஆனந்தம் எங்கள் குடும்பக் கவலையைக் கூட ஒரு அளவுக்குக் குறைத்தது. பாம்பும் தேளும் நெளியும் குழியிலே விழுந்தவன் கைக்குக் கிடைத்த வேரைப் பிடித்துக் கொண்டு