உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அறிஞர் அண்ணா



அவர் ஓர் கணக்குப் பிள்ளை. ஆயிரம் இரண்டாயிரம் என்று கணக்கெழுதுகிறார். தேள் கொட்டி விட்டால் விஷம் ஏறுவது போல் வயதும் மேல் வளர்ந்து கொண்டே வந்தது. எனது வயதும் வளர்ந்தது. ஊரார் ஏன் இன்னமும் காந்தாவுக்குக் கலியாணம் ஆகவில்லை என்று கேட்கும் கேள்வியும் வளர்ந்தது. அப்பா அம்மாவின் விசாரமோ சொல்ல முடியாது. இந்த நிலையில் தம்பி இராகவன் சொல்லாமற் கொள்ளாமல் ஊரை விட்டுப் போய் விட்டான். எங்கே போனானோ என்ன நேரிட்டதோயென்று நாங்கள் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்தோம். ஒரு மாதத்திற்குப் பிறகு இராகவனிடமிருந்து கடிதம் வந்தது. மேல் விலாசம் இராகவன் கையெழுத்தாக இருந்ததால் மகிழ்ந்தேன். கடிதம் என் பெயருக்குத்தான் வந்தது. வீட்டிலும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் உள்ளே இருந்த செய்தி எங்களுக்குச் சர்ப்பம் தீண்டியது போல் இருந்தது.

காந்தாவுக்கு NB நான் சொல்லாமல் ஓடிவந்து விட்டேன் என்று கவலைப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். முதுகு வலிக்க மூட்டை சுமப்பவனுக்குப் பாரம் குறைந்தால் நல்லதுதானே. வறுமையிலே வதையும் நமது குடும்பத்தில் நான் இல்லாதிருப்பது ஓரளவு பாரம் குறைவதாகவே நான் கருதுகிறேன். இங்கு நான் வந்ததற்கு காரணம் வேலை ஏதாகிலும் கிடைக்கும் என்பற்காக மட்டுமல்ல; அங்குள்ள தரித்திரத்தின் கோரத்தைக் காணச் சகியாது வந்து விட்டேன், என்று சொல்வது போதாது. சோமுவின் நடத்தையினாலேயே நான் இப்படி வந்துவிட நேரிட்டது.

காந்தா, நீ சோமுவைக் காதலிக்கும் விஷயம் எனக்குத் தெரியும். கண்ணில்லையா எனக்கு, கருத்து இல்லையா, சோமு நல்லவன். ஆனால் அவனுடைய உலகம் வேறு. அவன் ஒரு பணக்கார வேதாந்தி. நாம் ஏழைகள். அவனுக்கு உலகம் மாயமாம், வாழ்வு பொய்யாம். மணம் ஒரு சிறை வாசமாம், காதல் ஒரு பந்தமரம், அவன் வாழ்நாளில் பகவத் சேவையைத் தவிர வேறொன்றும் செய்ய மனம் இடந்தரவில்லையாம்.