உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

31



மறந்தேன்.என் மனதிலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணங்களைக் கடிதத்தில் எழுதினேன். சாந்தாவிடம் கொடுத்தனுப்பிவிட்டு மார்பு துடிதுடிக்கக், கண்கள் மிரள மிரளக் காத்துக் கொண்டிருந்தேன். நெடுநேரங் கழித்து வந்த சாந்தாவின் முகத்தைக் கண்டதும் காரியம் கைகூடவில்லை என்று புரிந்து விட்டது.

"அக்கா! அவர் படித்தார். கடிதத்தை. முதலிலே பிரித்தார். பிறகு காந்தாவை இப்படிப்பட்டவள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லையே. இப்படி ஒரு அன்னியனுக்குக் கடிதம் எழுதலாமா? இதெல்லாம் சினிமா பார்ப்பதாலும், நாவல் வாசிப்பதாலும் வருகிற கேடுகள். இனி இவ்விதமாக நடக்க வேண்டாமென்று சொல்லு. தரித்திரம் பிடுங்கித் தின்கிறது. இந்த லட்சணத்திலே துடுக்குத் தனமும் தாண்டவமாடுகிறது உன் அக்காவிடம், காதலாம்! ஆசையாம்! எதற்காக ஆசை? பணம் இருக்கிறது என்னிடம் அதற்காகத்தானே இந்த பிளான். அதற்கு வேறே ஆளைப் பார்க்கச் சொல்லு. நான் கலியாணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து விட்டால் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கேற்ற பெண்கள் ஆயிரம் கிடைக்கும். நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை. அதிலும் இப்படிப்பட்ட வெட்கம் கெட்டவளைக் கண்ணெடுத்தும் பாரேன்." என்று திட்டினார். நான் அழுதுவிட்டேன் அக்கா. ஏன் அந்தக் கடிதம் எழுதினாய்? என்று சாந்தா சோகத்துடன் கூறினாள்.

நான் என்ன செய்வது? மனம் அனலில் விழுந்த புழுப்போல் துடித்தது. மிக்க கேவலமான காரியத்தையன்றோ செய்து விட்டேன்? சோமு என்னை ஏற்க மறுத்ததோடு, ஏளனம் செய்யவுமன்றோ இடங்கொடுத்து விட்டேன். அவருடைய அந்தஸ்து என்ன? நான் யார்? அவர்மீது எனக்குக் காதல் ஏற்பட்டதென்றால், அவரது பணத்தைப் பெறுவதற்கே நான் பசப்புகிறேன் என்று அவர் கருதுகிறார். நான் செய்தது தவறு. கண்ணிழந்தவள் காட்சிக்குச் செல்வானேன்? காலிடறி விழுவானேன்? செவிடனுக்கு சங்கீதம் ஒரு கேடா?