உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அறிஞர் அண்ணா



என் கடிதத்தைக் கண்டு அவர் சிரித்தாராம். எவ்வளவு ஏளனம்? என் இருதயத்தில் இடம் பெற்று என்னை வாட்டி வதைத்த எண்ணங்களை நான் அக்கடிதத்தில் எழுதினேன். அதைக் கண்டு அவர் சிரித்தாராம். நீங்கள் சற்றுப் படியுங்கள் என் கடிதத்தை, சிரிக்க வேண்டுமா? அழவேண்டுமா? கூறுங்கள். இதோ என் கடிதம் படியுங்கள்.

"என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட குணரூபா!"

என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் திருவடிகளைப் பணிந்து அடியாள் எழுதும் கடிதத்தை முழுவதும் படிக்கக் கோருகிறேன்.

பிராணேசா! தங்களைக் கண்ட நாள் முதல் எனக்குத் தங்கள் மீது அளவுகடந்த ஆசை உண்டாகிவிட்டது. நாளாகவாக அந்த ஆசை எனக்குப் பித்தம்போல் வளர்ந்து விட்டது. இதனைத் தங்களுக்குத் தெரிவிக்கும் துணிவு எனக்குக் கொஞ்சத்தில் வரவில்லை. மகாரூபவானும், குணாளரும் செல்வனுமாகிய தங்களைக் கணவராக அடையும் பேறு மகா கேவலமான நிலையில் உள்ள எனக்கு, தரித்திரத்தைக் கட்டிக் கொண்டு புரளும் எனக்குக் கிட்டாது என்று எண்ணினேன். தங்களுடைய அந்தஸ்திற்கு எத்தனையோ ரதிகள் கிடைப்பர். பணக்காரப் பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டு பங்களாவில் உலவ, உங்களுக்கு ஆண்டவனின் கடாட்சம் இருக்கிறது. நான் உங்கள் மனைவியாக முடியுமா? திருடனுக்கு இராஜவிழி வருமா? இதை எண்ணி நான் என் ஆசையை அடக்கிப் பார்த்தேன், முடியவில்லை. தங்கள் வீட்டில் சமையற்காரியாகக் கூட ஆகமுடியாத அவ்வளவு அபாக்கியவதியாகத்தான் நான் இருக்க முடியும். ஆனாலும் குழந்தைகள், 'சந்திரனைப் பிடித்துக் கொடு' என்று தாயாரைக் கேட்பது போல், நான் தங்களைத் தரும்படி தினமும் தேவியை வேண்டுகிறேன். மனமே பேராசை கொள்ளாதே என்று எவ்வளவோ கூறினேன் என் மனதுக்கு. மனது உம்மிடம் லயித்து விட்டது. தாங்கள் வெறும் பணக்காரராக மட்டும் இருந்தால் பரவாயில்லை. என் மனத்தைக் கொள்ளை கொண்டீர்கள். என்னைத் தங்கள்