உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

37



அவருக்குத்தானே சொந்தம். இவ்வளவு லலிதமான பொருளை மிக மலிவாக வாங்கி விட்டோமே என்ற சந்தோஷம் அந்த வியாபாரிக்கு. பூரிப்பான வைர மோதிரத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்ளும் டம்பக்காரன் போல் அவர் நான் போகும்போதும், வரும்போதும் என்னைப் பார்த்துக் களிப்பார். அவருக்கு ஆனந்தந்தான். மூன்று மனைவிகள் இறந்ததும், இத்தகைய 'முத்து' எனக்குக் கிடைக்க வேண்டி இருந்ததால்தான் என்றுகூடச் சொன்னார்.

எனக்குத் திருமணம் நடந்தது. திவ்வியமான நாளாம். மங்களமான முகூர்த்தமாம். மங்களத்தின் லட்சணம் மறுமாதமே தெரிந்துவிட்டது. கழனியைச் சுற்றிப் பார்த்து விட்டு வரச்சென்ற கணபதி சாஸ்திரிகள் — என் கணவர் கால் வழுக்கிக் கீழே விழுந்து சில நாட்கள் படுக்கையில் இருந்து விட்டு பரலோகப் பிராப்தியானார். நான் விதவையானேன். சகுனத் தடையானேன். சமுதாயத்தின் சனியனானேன். பெற்றோரின் கண்களில் நீர் வழியும்படியான நிலைபெற்றேன். தீ மிதித்தவள் போல் தங்கை சாந்தா திகில் அடையக் கூடிய உருவைப் பெற்றேன். என் இளமையும் எழிலும் போகவில்லை. என் கண்ணொளி போகவில்லை. நான் அபலையானேன். ஆனால், அழகியாகத்தான் இருந்தேன். தாலி இழந்தேன். ஆனால், சாய்ந்த தளிர் போலிருந்தேனே யன்றி சரகாக இல்லை, குங்குமமிழந்தேன். ஆனால் பொட்டிடாத என் நெற்றியும் பொலிவுடன்தான் இருந்தது. பார்சிக்காரிகள் பொட்டிடுவதில்லை. நம்ம காந்தாவின் முகம் அவாளுடையதைப் போலவே இருக்கிறதென்று அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். வாடாத பூவாக இருந்தேன். ஆனால் விஷவாடை உள்ள மலர் என்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா? எனக்கு மணம் செய்வித்து விட வேண்டும் என்று துடித்தவர்கள், இன்று எனக்குத் துணையாகவா இருந்தார்கள்? ஏதோ அவள் எழுத்து என்று கூறிவிட்டு, என்ன செய்யலாம் கொடுத்து வைக்காதவள் என்று கூறிவிட்டு, அவரவர்கள் காரியத்தை அவரவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள்.