உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அறிஞர் அண்ணா



உலகினிடம் வெறுப்பும் உண்டாக எனக்கு இநத் ஒரு சம்பவம் போதாதா? ஒழுங்காக நாணயமாக, நாலு பேருக்குப் பயந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்களே அதை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்னை இந்த உலகம் ஒழுங்காகவா நடத்திற்று? சாகப்போகும் கிழவனுக்குச் சல்லாபக் கருவியாக்கிற்று. இது ஒழுங்குதானா? என் இளமை அவனுக்குப் பலியிடப்பட்டது. நியாயமா அந்தச் செயல்? அவன் இறந்தும் நான் இருந்தும் இறந்தவளாக வேண்டும் என்று உலகம் கட்டளையிட்டது நீதியாகுமா? உலகத்திலே கொடுமைக்கு ஆளான நான் நன்றி செலுத்தி நல்லவளாக வாழ வேண்டுமா! நல்லவள் என்றால் என்ன பொருள்? நாதனை இழந்த நாரி, வாழ்வை இழந்து விடுவது தானா? என் வாழ்வு, என் பொருள் அல்லவா? அதனை, இறந்த என் கணவருடன் சேர்த்து வைத்தும் கொளுத்தினார்களே அதையும் நான் சகித்துக் கொள்ள வேண்டுமாம். எத்தனை எத்தனையோ விதவைகளின் விதியை எனக்கு உதாரணம் காட்டினார்கள்.

"ஜாக்ரதை! சர்வ ஜாக்ரதையாக இருக்கவேண்டும். நாலுபேர் எதிரே வரவிடாதீர்கள். காலமோ கெட்டுப் போச்சு, பெண்ணோ சிறுசு, மூக்கும் முழியும் சுத்தமாக, அச்சுப் பதுமை போல் இருக்கிறது. தப்பித் தவறி ஏதேனும் நேர்ந்துவிட்டால் தலைமுறை தலைமுறைக்கும் கெட்ட பெயர் நீங்காது" என்று என் பெற்றோருக்கு உறவினர் புத்திமதி கூறலாயினர். வெந்த புண்ணிலே வேலிட்டனர். நாங்களோ ஏழைகள். என்ன சொன்னாலும் தலையை அசைக்கத்தானே வேண்டும். செல்வன் வீட்டிலே சென்று இதுபோல் சொன்னால், நாக்கைத் துண்டிப்பார்கள். ஏழை குமாஸ்தாவிடம் உறவினருக்கு என்ன பயம்? எல்லாம் உனது நன்மைக்குத்தான் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறார்கள். "காந்தா நல்லவள் தான், இருந்தாலும் அறியாதவள். யாரும் கொஞ்சம் கண்காணிப்பாகத்தான் இருக்க வேண்டும்" என்றுரைத்தனர். அப்பாவிடம், எவ்வளவு அக்கறை பாருங்கள்! எங்கள் ஏழ்மையைக் கண்டு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. என் வாழ்வு கொள்ளை போவதைத் தடுக்க யாரும் வரவில்லை. எல்லாம்