உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

57



தலையணையிலே நீராகப் பெருக்கித் தீர்த்துக் கொண்டேன். நான் பெண்பால், அவர் ஆண்பிள்ளை! ஆத்திரத்தைக் காட்டுகிறார். காட்டட்டுமே, அது எனது வெற்றியைத்தானே வெளிப்படுத்திற்று! சபாஷ் காந்தா, என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.

நேரில் பேசிப் பயனில்லை. டெலிபோனில் பேசிப் பயனில்லை. கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும், திட்டியும் எதனாலும் பலன் கிடைக்காமற் போயிற்று. ஆனால் சோமுவுக்கு வெகு வேகமாக வளர்ந்து கொழுந்து விட்டெரிந்த தீ அணையுமா? எப்படியேனும் என்னை இணஙகச் செய்ய வேண்டுமென்று கருதி மறுபடியும் ஒரு நாள் வீடு வந்து பேசினான். அப்போது நான் "சிறந்த வேதாந்தியான நீர் கேவலம் காமாந்தகாரத்திலே மூழ்கலாமோ? எவ்வளவு படித்தவர். என் போன்ற கெட்டவளின் சகவாசம் ஆகுமா? வேண்டாம் சோமு விட்டுவிடு. நான் என்ன, என்னைவிட உன் மனைவி அழகு, என்று கூறுகிறார்கள்" என்று நான் சோமுவுக்கு புத்திமதி கூறத் தொடங்கினேன்.

"காந்தா! வேதாந்தமெல்லாம் போய் வெகு நாட்களாகிவிட்டன. கையில் இருந்த காசில் பெரும் பகுதி அந்த இழவுக்கே அழுதுவிட்டேன். கடைசியில் ஒரு பணக்காரப் பெண்ணை கலியாணம் செய்து கொண்டேன். ஆனால் வாழ்க்கையிலே ருசி இல்லை. உன்னைக் காண்பதற்கு முன்பும் நான் எத்தனையோ முறை உன்னைப்பற்றி எண்ணி எண்ணி ஏங்கியதுண்டு."

"என்னைப் பற்றிய சேதியைக் கேள்விப்பட்ட பிறகுமா?"

"ஆமாம்! நான்தானே உன்நிலை கெட்டதற்குக் காரணம். நான் வீணான வேதாந்தமும், விரசமும் கொண்டு, ஏதோ உலகிலேயே நான்தான் புது நாயன்மார் என்று எண்ணிக்கொண்டு, கலியாணபந்தமே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே, உன்னை நான் கலியாணம் செய்து கொள்ள மறுத்தேன். இந்த ஆறு வருடத்தில் நான் அனேக பாடங்கள் தெரிந்து கொண்டேன்.