உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அறிஞர் அண்ணா



உலகில் வாழ்க்கை இன்பம் இருக்க வேண்டுமானால், மனமொத்த காதலியைக் கூடி வாழ வேண்டும். பாடுபட்டுப் பிழைக்க வேண்டும். பலருக்கு நன்மை தரும் காரியம் செய்ய முயல வேண்டும். வெட்டிக்கு வேதாந்தம் பேசிக் கொண்டு, பணத்தையும், காலத்தையும் பாழாக்கிக் கொண்டு இருக்கக் கூடாது. காந்தா! நான் மணம் செய்து கொண்டவளுக்கு என்னிடம் ஆசை இருக்கக் காரணமில்லை. எனக்கும் அவளிடம் ஆசை கிடையாது. ஆனாலும் ஏதோ வாழ்ந்து வந்தேன். உன்னைக் கண்டது முதல், நீ அன்று மூட்டி விட்ட காதல் பெரிய ஜூவாலையாகி விட்டது. இனி உன்னோடு வாழ்ந்தால்தான் நான் வாழமுடியும் என்னை நீ ஏற்றுக் கொள்."

"அது எப்படி முடியும்"

"ஏன் முடியாது? என்மீது உனக்கு ஆசை இல்லையா? நிச்சயமாகச் சொல் காந்தா. ஆசை இல்லையென்றால் அடிக்கடி உன்னைக் கண்டு பேச அனுமதிப்பாயா? உன்னைக் கன்னத்தில் அடித்ததைக்கூடப் பொறுத்துக் கொண்டாயே. தோட்டக்காரன் எதிரில் திட்டினேன். பிறகும் என்னிடம் சகஜமாகவே பேசுகிறாயே! இருப்பதை மறைக்காதே என் மீது ஆசை உண்டு உனக்கு. முன்பு உன் ஆசையை நான் வீணாக்கினேன். இன்று நம்மிருவர் விருப்பமும் ஒன்று கலக்கட்டும்."

"அதுதானே முடியாது."

"ஏன் காந்தா முடியாது?"

“நான் வேறொருவனின் பொருள். என்னை வறுமைப்பிணியிலிருந்து மீட்டு, உலகில் நிம்மதியாக வாழச் செய்யும் மிராசுதாரின் வைப்பாட்டி. ஆமாம்? உமது மனைவியாக இருக்கத் தவம் கிடந்தேன். முடியவில்லை வேறு ஒருவன் பெண்டானேன். அவன் விட்டுச் சென்றான். காட்டு ரோஜாவாக இருந்தேன். கவலையில் மூழ்கினேன், துக்கத்தில் துடித்தேன். கஷ்டத்தின் மேல் கஷ்டம் வந்தது. காப்பாற்றவோ ஆதரவு தரவோ, ஐயோ பாவம் என்று சொல்லவோ யாரும் முன் வரவில்லை. குடும்பத் தொல்லை கொட்டிற்று. விஷம் தலைக்கேறிற்று. சோமு! நான் விபச்சாரியாக வேண்டிய நிலையும வந்தது. நான்