உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

59



குலமாதாக, குடும்ப விளக்காக, உன் தர்மபத்தினியாக இருக்க அவாவினேன். இன்று உனது கண்களை மயக்கும் காம வல்லியாக இருக்கிறேன். பணம் படைத்த நீ என்னை மணந்து கொள்ள மனமின்றி கைவிட்டாய். வேறோர் பணக்காரப் பெண்ணை மணம் செய்துகொண்டாய். வாழ்க்கையிலே வசீகரம் இல்லை என்று இன்று வருத்தப்படுகிறாய். ஏற்பாரற்று கிடந்த ஏழையாகிய நான் விதவையாகி வேதனைப்பட்டபோது எனக்கு வாழ்வு என்ற ஒன்று இருக்க முடியுமா? என் இளமையும், அழகையும், அன்பையும், ஆவியையும் உனக்கு அர்ப்பணம் செய்ய நான் முன் வந்தேன். உன் காலடியிலே வைத்தேன். நீ உதைத்துத் தள்ளினாய். இப்போது என்னை அடையவேண்டுமென்று அலைகிறாய், என் மனம் அந்நாட்களில் பட்ட பாடு என்ன என்பது உனக்குத் தெரியுமா? ஒரு பெண் தன் கூச்சத்தையும் விட்டு தன்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி கடிதம் எழுதவும் துணிந்தாள் என்றால் அவளுடைய விருப்பம் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாயா? பணக்கார குடும்பத்தவராக இருந்தால் உமக்கு உள்ளம் என்ற ஒரு வஸ்து இருக்கும் என்பதுகூடத் தெரியாது போயிற்று. பணம் குறையக் குறைய நீர் உமது வைராக்கியத்தை விட்டு, ஒரு பெண்ணை மணந்து கொண்டீர். அன்று என்னை உதறித் தள்ளினீர். இன்று என்னைத் துரத்திக் கொண்டு வருகிறீர். ஆனால், உமது பிடிக்கு அகப்பட முடியாத உயரத்தில் நான் இருக்கிறேன். எனக்கு இப்போது வாழ்க்கையைப் பற்றிய கவலை இல்லை. வேண்டியதைப் பெறப் பணம், ஏவல் புரிய ஆட்கள், சிங்கார மாளிகை, செல்வச் சாமான்கள், நகைகள், நாசூக்குகள் எல்லாம் காத்துக் கொண்டு கிடக்கிறேன், என் முகத்தைத் தனது 'மோட்ச லோகம்' என்று கருதும் ஒரு சீமானின் ஆதரவில் நான் இப்போது இருக்கிறேன். நீ என்னைத் தொலைவில் நின்று, கண்டு பெருமூச்செறியலாமே தவிர, அடைய முடியாது. நான் மாடியில் நிற்கிறேன். நீ படிக்கட்டில் நிற்கிறாய். நான் முன்பு அபலை. அப்போது ஆதரிக்க முன் வரவில்லை. நீ இப்போது நான் உன்னை ஏற்றுக் கொள்ள முடியுமா? மேலும் மிராசுதார் என்னாவது..."