உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அறிஞர் அண்ணா



"அவன் மண்டையில் இடி விழட்டும் எனக்கென்ன?"

"உமக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் எனக்கு?"

"உனக்குப் பணத்தின்மீது அவ்வளவு பேராசையா பிடித்து விட்டது?"

"பேராசையல்ல! அதன் அருமையைத் தெரிந்து கொண்டேன். அடைந்து மிருக்கிறேன் அதை இழக்க மனம் வருமா?"

"பணந்தானா பெரிது?"

"சந்தேகம் என்ன? வாழ்க்கையில் பணம் பிரதானமாக இருக்கும் விதமாகத்தானே உலகம் இருக்கிறது. ஏழையென்றும், பணக்காரரென்றும் இரு ஜாதிகள் உலகில் இல்லாமல் ஒரே ஜாதியாக இருந்தால், இந்த எண்ணம் எனக்கும் இராது. இந்தக் கேள்வியும் பிறந்திராது. பணமின்றி எங்கள் குடும்பம் பாடுபட்டபோது, பணமா பெரிது என்று வேதாந்தம் பேசிக் கொண்டு, எங்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லையே. பணம் எந்த விதத்திலோ என்னிடம் வந்த பிறகுதானே நான் பரிமளத்தோடு வாழ முடிந்தது" என்று கூறினேன். சோமு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததைக் கண்டேன். என்னால் அதற்குமேல் பிடிவாதம் செய்ய முடியவில்லை. ஆகவே, நான், "அழாதே கண்ணா, நான் உன்னை அதிகமாகத்தான் வாட்டி விட்டேன். இதோ பார்! கொஞ்சம் சிரி. இன்னமும் ஏன், துக்கம். இதோ போதுமா, இன்னொரு முத்தம் தரட்டுமா, ஆஹா முகத்திலே இப்போதுதானே சந்தோஷம் தோன்றுகிறது. சோமு, இப்படி உன்னைத் தழுவிக் கொண்டு கொஞ்சிக் குலவ நான் எவ்வளவு நாட்கள் எண்ணி எண்ணிக் கிடந்தேன் தெரியுமா. வியர்வையைத் துடைத்துக் கொள். இதோ முந்தானையால் துடைத்துக் கொள். இனி உனக்கு நான் விருந்தாக இருப்பேன், பயப்படாதே. மிராசுதாரர் கண்களில் படக்கூடாது, விஷயம் அவர் காதுக்கு எட்டக் கூடாது. கொஞ்சம் ரகசியமாக இருக்கட்டும். ஆனால் நீ தான் என் ஆசை நாயகன், என் இன்பக் களஞ்சியம், என் உல்லாசப் புருஷன், என் உயிருக்குயிர், ஏன் இன்னமும் விம்முகிறாய் கண்ணே! இதோ பார். இப்படி இருந்தால் நான் மறுபடியும் கோபித்துக் கொள்வேன் பார், பார் மடியிலே