உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

65



காய்ந்து விட்டது என்று கூறுவார்களே. அக்குறை வராமல் பார்த்துக் கொள்கிறேனேயொழிய எனக்கென்ன உம்மீது ஆசை குறைந்து விட்டதா? சோமு மீது ஆசை புரண்டோடுகிறதா?"

"ஆசை இல்லாமல்தானா அவன் பேருக்கு உயில் எழுதியிருக்கிறாய்?"

"உயில் எழுதினேனா? நானா"

"உயிலென்றால் உயிலேதான்? உன் பேருக்கு 20,000 ரூபாய்க்கு இன்ஷியூர் செய்திருக்கிறாயே, அது நீ இறந்துவிட்டால் அவனுக்குத்தானே போய்ச் சேர வேண்டுமென்று எழுதியிருக்கிறாய்."

"அப்பா! அதையா சொன்னீர்கள். அதற்குப் பணம் அவரே கொடுக்கிறார். வந்தால் அவரே எடுத்துக் கொள்கிறார். நமக்கு என்ன இதிலே நஷ்டம்?"

"ரொம்ப நியாயந்தான்"

"சரி சரி பேச்சை நிறுத்தும், என் இஷ்டம்."

"ஆமாம்! உன் இஷ்டப்படிதான் காரியம் நடக்கிறது, நடக்கட்டும், நீ அவனை நம்பிக்கொண்டு இரு. அவன் லிலியை இழுத்துக் கொண்டு திரியட்டும்."

"லிலியோடாவது திரியட்டும், ரோசோடாவது அலையட்டும், எனக்கென்ன? நான் எப்படி அவரை கட்டுப்படுத்த முடியும். நான் உம்மைப் பிரிய இசைகிறேனா? அதுபோல அவருக்கும் நான் மட்டும் போதவில்லை அலையட்டும்."

"அலையட்டும், தொலையட்டும், உன் உயிரையும் போக்கட்டும், எனக்கென்ன?"

"என் உயிரைப் போக்கத்தான் நீங்கள் உதித்தீர்களே. அவர் ஏன் போக்குகிறார்."

"ஏனோ? உன் உயிர் போனால் எனக்காக 20,000 ரூபாய் வரப் போகிறது" என்று மிராசுதாரர் கேட்டார். இந்தச் சம்பாஷணை எனக்கு சஞ்சலத்தையும், திகிலையும் உண்டாக்கிற்று. என் உயிருக்கே ஆபத்து வருமோ என்று அஞ்சினேன்.