உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

67



கொல்லப்பட்டாள் என்று உடனே எனக்குத் தோன்றிற்று. பணத்துக்காக மெள்ள மெள்ளக் கொல்லும் ஏதோ ஒரு வகை விஷத்தைக் கொடுத்துச் சோமு தன் சொந்த மனைவியைக் கொன்று விட்டான் என்று மிராசுதார் கூறினார். சுத்த அபாண்டம் பழி என்று மிராசுதாரிடம் நான் வாதிட்டேன். ஆனால் என் மனதில் மிராசுதார் கூறியதே உண்மை என்று தோன்றிற்று. இயற்கையாக மரணமடைவது போல் ஏதோ சூது செய்துதான் சோமு ருக்குவைக் குற்றுயிராக்கித் தாய் வீட்டுக்கு அனுப்பினான் என்று தீர்மானித்தேன். ஆனால் சோமுவை நான் எப்படி கேட்பது?

இன்ஷ்யூர் கம்பெனிக்கு எழுதி, நான் இறந்தால் சோமுவுக்குப் பணம் போய்ச் சேரவேண்டும் என்பதை மாற்றிவிட்டால், என் உயிருக்கு ஆபத்து இராதல்லவா? அதுவே நல்ல யோசனை, என் பெயருக்கும் எழுத வேண்டாம். உன் தங்கை பேருக்கு எழுதிவிடு என்று மிராசுதார் கூறினார். இதைச் செய்யத்தான் சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். சோமுவுக்குச் சந்தேகம் வராத விதத்திலே காரியத்தை நடத்த எண்ணினேன். ஏனெனில் நான் உயிரையும் இழக்க விரும்பவில்லை. இன்ஷ்யூர் விஷயத்தில் நான் அவசரப்பட்டு ஏதாகிலும் செய்தால் சோமு கோபித்துக் கொண்டு என் சினேகமே வேண்டாமென்று கூறிவிடுவார். அல்லது பணம் இல்லாமற் போனால் போகிறது என்று பழி தீர்க்க என்னைக் கொல்லமுயன்றால் என்ன செய்வது என்று பலவிதமான பயம் பிடித்துக் கொண்டது. சோமுவின் பக்கத்தில் படுத்துத் தூங்க பயந்தேன். அவன் கொண்டு வரும் சிற்றுண்டி, அவன் அனுப்பும் டானிக் இவைகளைக் கூட உபயோகிப்பதில்லை. எதிலே என்ன விஷம் கலந்திருக்குமோ என்ற பயமாகவே இருந்தது.

பயங்கொண்ட எனக்குச் சோமு, பழையபடி தீர்த்த யாத்திரை போனால் என்ன? அவனுக்கு இன்பமூட்டும் என்னை அவனால் வாழ்க்கையை வளைத்துக் கொண்டு விபசாரியான என்னை — விபசாரியாகியும் அவனுக்கு விருந்தான என்னைக் கொன்று பணம் பெற எண்ணிடும் பேர்வழி தீர்த்த யாத்திரைக்குத்தானா போகவேண்டும்,