உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அறிஞர் அண்ணா



பரலோக யாத்திரைக்குப் போனால்தான் என்ன? என்னிடம் ஆசை போய், என் பணத்தை எவளோ ஒரு சட்டைக்காரிக்குக் கொடுக்கத் துணிந்த பிறகு, சோமு இறந்தால் என்ன? அவனைக் கொன்றால்தான் என்ன? என்று கோபம் உண்டாயிற்று.

இந்தச் சமயத்தில் எங்கள் வீட்டு வேலைக்காரியின் சிறுபெண் இறந்துவிட்டது. நோய் நொடி ஒன்றுமில்லை. குழந்தை இறந்த செய்தியைக் கூறிய வேலைக்காரி மூலம் ஒரு பயங்கரமான உண்மை வெளியாயிற்று. அதாவது என்னைக் கொல்ல ஏற்கனவே ஏற்பாடு செய்து விட்டான் என்பது.

அவன் தரும் தின்பண்டங்களை நான் தின்னாததால் எனக்கு விஷமூட்டச் சோமு விசித்திரமான முறையைக் கையாண்டான். அது என்னைக் கொல்லுவதற்குப் பதிலாக வேலைக்காரப் பெண்ணைக் கொன்றுவிட்டது.

ஒரு நாள் சோமு எனக்கு ஜவ்வாது டப்பி ஒன்று வாங்கி கொடுத்தான். புருவத்துக்கு ஜவ்வாது கலந்த மை பூசிக் கொள்வது வழக்கம். நான் மறந்தாற்போல் அந்த டப்பியை எங்கோ வைத்துவிட்டேன். அது காணாமற் போய்விட்டது. அது வேலைக்காரப் பெண்ணிடம் அகப்பட்டதாம். அதைத் தான் அந்தப் பெண் பிரதி தினம் புருவத்துக்குப் பூசிக் கொண்டே வந்தாள். அது மெள்ள மெள்ள அவள் உயிரைப் போக்கும் விஷம் கலந்த ஜவ்வாது. அந்தப் பெண் குழந்தையின் அழகை வர்ணித்த வேலைக்காரி, என் ஜவ்வாது டப்பியை எடுத்துச் சென்று பூசிக்கொண்டு வந்த செய்தியைக் கூறினாள். அதைக் கேட்டதும் எனக்கு என்னமோ சந்தேகம் தோன்றிற்று. அந்த டப்பியை எடுத்து வரச் சொல்லி மிச்சமிருந்த ஜவ்வாதை ஒரு டாக்டரிடம் அனுப்பிச் சோதிக்கச் செய்ததில், அதில் ஒரு வகையான விஷம் கலந்திருப்பதைக் கூறினார். இன்னமும் சும்மா இருக்க என் மனம் இடந்தருமா? ஜவ்வாதில் விஷமிட்டு என்னைக் கொல்லத் துணிந்தானே, பாதகன் என்று என் மனம் பதறிற்று. எவ்வளவு உறவாடினேன், கடைசியில் எவ்வளவு துரோக சிந்தனை கொண்டான் சோமு. என் உயிரைக் குடித்துவிட்டு அவன் லிலியுடன் குலாவிக் கொண்டிருக்க