உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

69



விடுவேனா? அவன் எனக்குப் பயணற்றுப் போனான். ஆகவே அவன் இனி எனக்குத் தேவையில்லை. பயணற்றுப் போனதுடன், என் உயிருக்கு உலை வைக்கவும் துணிந்தான். ஆகவே அவன் உலகில் இருக்கவும் விடக் கூடாது என்று தீர்மானித்தேன். என் ஆசையை மறக்க அவன் துணிந்தபோது அவனிடம் நான் ஏன் பாசம் காட்ட வேண்டும்? அவன் என்னைக் கொல்லு முன்பு நானே அவனைக் கொல்லுவது என்று துணிந்தேன்.

கொலை நடந்த இரவு — மிராசுதார், என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அது லிலி வீட்டு பட்லரிடமிருந்து பெற்ற கடிதம். அதில் ஆங்கிலத்தில் இருந்ததை அவர் படித்து விளக்கினார். ரோஜா புஷ்பத்தில் திராவக ரூபமான விஷத்தைத் தெளித்து எனக்குத் தருவது என்றும், அது உயிரைப் போக்கி விடுமென்றும் பணம் விரைவில் கிடைக்குமென்றும் சோமு லிலிக்கு கடிதத்தில் எழுதியிருந்தான். பணம் பெறாமல், வர வேண்டாம் என்று லிலி கடுமையான உத்தரவு விட்டதால் சோமு ரோஜா புஷ்பத்தில் விஷமிட்டு என்னைக் கொல்ல 'பிளான்' போட்டு விட்டான். லிலி குடித்து மயங்கியிருந்த வேளையில் பட்லர் இக்கடிதத்தையும், சோமு எழுதிய வேறு கடிதங்களையும் எடுத்து வந்து மிராசுதாரிடம் கொடுத்தான். அவன் மிராசுப் பண்ணையில் ஒரு காலத்தில் வேலை பார்த்தவன்.

இக்கடிதத்தைக் கண்டதும். என்னையுமறியாமல் என் கண்களில் நீர் பெருகிற்று. மிராசுதாரர், "பைத்தியமே அவன் வந்தால், வராதே என்று கூறிவிடலாம். ஏன் பயம்" என்று தேற்றினார். "வேண்டாம்! இன்று ஒரு இரவு மட்டும் என் இஷ்டப்படி நடக்க உத்திரவு கொடுஙகள்" என்று கெஞ்சினேன், அவரும் சம்மதித்தார்.

இரவு சோமு வந்தான். வாட்டமற்ற முகம், வஞ்சனை துளியும் தெரியாதபடி நடந்தான். கையிலே நான் எதிர்பார்த்த ரோஜா இருந்தது. நானும் நன்றாகவே நடித்தேன். ரோஜாவைப் பெற்றுக் கொண்டேன். ஏதோ வேலையாக உள்ளே போவதுபோல் போய், அந்த ரோஜாவை வைத்துவிட்டு, நான் வாங்கி வைத்திருந்த ரோஜாவைத்