பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும்


பாரதியும் பாரதிதாசனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் மிகச் சிறந்த பாவலர்கள். இருவரும் புதுமை நோக்குள்ளவர்கள். புரட்சிக் கருத்துடையவர்கள்.

பாரதி நாட்டு விடுதலைக்காகப் பாடியவர். மக்கள் யாவரும் ஒப்பென்று எண்ணியவர். நடைமுறையில் பொது எண்ணத்தோடு வாழ்ந்தவர். அவருடைய புதுமைக் கருத்துக்களிலே மனத்தைப் பறிகொடுத்து, அவருடைய கூட்டுறவில் இன்பம் கண்டு, அவரை வழிகாட்டியாகக் கொண்டு, இலக்கிய வாழ்வு மட்டுமன்றிப் பொதுவாழ்வும் கொண்டவர் பாவேந்தர் பாரதிதாசன்.

பாரதியிடம் கொண்ட உண்மையான ஈடுபாட்டின் காரணமாகத் தம் பெயரையே பாரதிதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டவர். பாரதியின் புரட்சி வழியைப் பின்பற்றிய பாரதிதாசன், பாரதியினும் தீவிரமான சமுதாயப் புரட்சி வழியிலே நடைபோடத் தொடங்கிப் பெரும்புரட்சியாளராக மாறிய நிலையிலும், பாரதியிடம் கொண்டிருந்த மதிப்பில் சிறிதுகூட மாற்றங்கொள்ளவில்லை.

கு-1