பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

குயிலும்...சாரலும்

ஆனால் எடுத்த எடுப்பிலேயே
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

என்று சுதந்திரப் பள்ளு தொடங்குகின்ற தென்றால், நாட்டில் பார்ப்பன ஆதிக்கம் வேரூன்றியிருந்தது பாரதியாரை எவ்வளவு உறுத்தியிருக்க வேண்டும். முதலில் இந்த அடிகளைச் சொல்லி விட்டுப் பிறகுதான் வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே என்று பாடுகின்றான்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே – பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே.

என்று உண்மையான சுதந்திரப் பள்ளைப் பாடுகின்றான் இப்படிப்பட்ட உண்மையான சுதந்திரக் கருத்துக் கொண்டிருந்த பாரதியைத் தன் வழிகாட்டியாகக் கொண்டு தன் பெயரையும் பாரதிதாசன் என்று பெயர் மாற்றிக் கொண்ட சுப்புரத்தினம் கடைசிவரை பாரதிதாசனாகவே இருந்தார்.

பாரதியினும் தீவிரமாக அவர் தன்மானக் கொள்கை வீரராக விளங்கினார்.

பாரதியின் குயில் பாட்டை அடியொற்றி அவர்தம் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற பாட்டை எழுதுகின்றார். பாரதி கையாண்ட கலிவெண்பா யாப்பிலேயே தம் நூலையும் படைக்கின்றார். அந்தப் பாட்டைத் தொடங்கும்போதே குயில் என்ற சொல்லில்தான் தொடங்குகின்றார். பாட்டின் முதல் அடி குயில் கூவிக் கொண்டிருக்கும் என்றே தொடங்குகின்றது.