பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

குயிலும்...சாரலும்

அங்கே கண்ட காட்சி பாவலரைத் திடுக்கிட வைக்கிறது. குயில் ஓர் ஆண் குரங்குடன் காதல் பேசிக் கொண்டிருக்கிறது. மானிடர்களைப் பழித்து இளக்காரமாகப் பேசுகிறது. சினத்துடன் பாவலர் வாளை வீச குரங்கு தப்பிப் போகிறது. குயிலும் மறைகிறது.

மூன்றாம் நாள் மீண்டும் சோலைக்குப் போகிறார். அப்போது குயில் ஒரு காளை மாட்டுடன் காதல்பேசிக் களிக்கிறது. பாவலர் வாளெடுத்து வீசக் காளை மாடு தப்பியோடுகிறது. குயில் மறைந்து விடுகிறது. பாவலர் வீடு திரும்புகிறார்.

மீண்டும் நான்காம் நாள்–குயில்–வரச்சொல்லித் தவணை கொடுத்த நாள்–பாவலர் போகின்றார்.

குயில் மீண்டும் பழைய காதல் பாட்டைப் பாடுகிறது. பாவலர் கோபத்தோடு அதன் பொய்க் காதலைக் கூறிச் சாடுகிறார்.

ஒரு முனிவர் தம் பழம் பிறப்பை யுணர்த்தியதாக ஒரு கதை கூறுகிறது குயில்.

குயில் முன்பிறப்பில் ஒரு வேடர் தலைவன் மகளாகப் பிறந்திருந்ததாம். மாமன் மகன் மாடன் சின்னக் குயிலி என்ற பெயருடைய இந்தப் பெண்ணைத் திருமணம் செய்யக் காத்திருந்தாராம். இதற்கிடையே வேறோர் வேடர் தலைவனுடைய மகன் நெட்டைக் குரங்கனுக்கு மணம் பேசி முடித்து வைத்திருந்தானாம் வேடர் தலைவன்.

இந்நிலையில் காட்டுக்கு வேட்டையாட வந்த சேரமான் மகனைக் கண்டு உண்மையான காதல் கொண்டாளாம் சின்னக் குயிலி. பாவலர் தான் முற்பிறப்பில் சேரமான் மகனாகப் பிறந்தவராம்.