பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24'குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

அறையில் உண்பது பாவேந்தர் வழக்கம். ஒருநாள் நானும் என் நண்பர் ஒருவரும் பாவேந்தரை அழைத் துக் கொண்டு ராமபவனுக்கே சென்று அங்கேயே சாப் பிட்டோம். அப்போது ராமபவனில் இட்டிலி காலணா. பாவேந்தர் சுவைத்துச் சாப்பிட்டார். சாப்பிடும் போது நடுவில் பேசுவது அவருக்குப் பிடிக்காது; பேசினால் சுவை தடைப்படும் என்பார். சப்ளையரை அடிக்கடி சட்டினி கேட்டுச் சலித்துப் போய் இந்தா அந்தச் சட்டினித் தோண்டியை இங்கேயே வச்சுட்டுப் போ!' என்று கூறினார். அன்று எங்களுக்குச் சிற்றுண்டிச் செலவு 2 உருபா 14 அனா ஆயிற்று. அன்று அந்த பில் தொகை பெரியது.

விழுப்புரம் சந்திப்புக்கு எப்போது பாவேந்தர் போனா லும், பிளாட்பாரத்தைச் சுற்றி நோட்டமிடுவது அவர் வழக்கம். அங்கே ஒருவன் கண்ணாடிப் பெட்டியில் இட்டிலியை வைத்துக் கொண்டு விற்பான். அந்த இட்டிலி கொஞ்சம் பழையதாகவும் புளிப்பாகவும் இருக் கும். மிகவும் காரமாக மிளகாய்ப் பொடியை எண்ணெ யில் கலந்து வைத்திருப்பான். அந்த இட்டிலி பாவேந் தருக்கு மிகவும் பிடிக்கும். பெட்டியையே காலி செய்து விடுவார்.

பாவேந்தர் கோபக்காரராக இருந்தாலும் சுவையான நண்பர். அவரோடு இருக்கும்போது பொழுது போவதே தெரியாது. எழுதத் தொடங்கி விட்டால் யாரிடமும் பேச மாட்டார்; எழுதிக் கொண்டே இருப்பார். கையில் சார் மினார்’ எப்போதும் புகைந்து கொண்டே இருக்கும். கையில் ஊசி ஏறியது கூடத் தெரியாமல் அவர் எழுதிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

பாவேந்தருக்கும் எனக்கும் இடையிலே இருந்த நட்பு ஆத்மார்த்தமானது. அவர் நினைவுகள் எல்லாம் இன் றும் என் உள்ளத்தில் பசுமையாக இருக்கின்றன.