பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 95

களைச் செயற்கருஞ்செயல் செய்யும் மகாத்துமாக்களாகச் செய்கிறது. இன்னும் சிலரிடம் இருக்க வேண்டிய அளவு இருந்து, மனித இயல்புடையவர்களாகச் செய்கிறது. ஒரு சிலரிடத்தில் இருக்க வேண்டிய அளவில் குறைந்து அவர்களை விலங்கு நிலையிலும் கீழான நிலையினை அடையச் செய்துவிடுகிறது.

இத்தமிழ் நாட்டில் திருக்குறள் என்னும் ஒப்பற்ற நூல் தோன்றுவதற்குப் பல காலம் முன்னரே சிபிச் சக்கரவர்த்தி என்ற ஒரு சோழ மன்னன் இந்நாட்டை ஆட்சி செய்து வந்தான். அரசனுக்கு வேண்டிய எல்லா நலன்களும் தகுதிகளும் நிறைந்திருந்த அவன், இங்குக் கூறப்பெற்ற அன்பு என்ற பொருளை எல்லை மீறிப் பெற்றிருந்தான். அவனுடைய அன்பின் விரிவில் மக்களும் விலங்குகளுங்கூட ஒன்றாகவே காட்சியளித்தனர். உண்மை அன்பு சுரக்குமானால், அன்பு காட்டப்படும் பொருள் களிடம் வேற்றுமை பாராட்ட முடியாதல்லவா?

இறைவனிடம் விரிகின்ற அன்பால், இறைவனுடைய படைப்புக்களைக் காணும்பொழுது சகோதர உணர்ச்சி இயல்பாகவே உண்டாகுமல்லவா? சிபி ஒரு நாள் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் காலடியில் மிகுந்த அச்சத்துடன் ஒரு புறா வந்து வீழ்ந்தது. அப்புறாவைக் கையில் எடுத்து அதன் அச்சத்தைப் போக்க முயன்றான் சிபி.

அதே நேரத்தில் பருந்து ஒன்று அவனிடம் கோபத்துடன் பறந்து வந்து, தன் உணவாகிய புறாவை அவன் விட்டுவிட வேண்டும் என்று வழக்காடியது. சிபியின் விரிந்த அன்பின் முன்னர் உயிருக்கு மன்றாடும் புறாவின் நடுங்கிய உடலும், பசியால் வருந்திய பருந்தின் உடலும் காட்சியளித்தன. வேறு உணவைத் தந்து பருந்தின் பசியைப் போக்க முயன்றாலும் பருந்து ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இறுதியாகத் தன் உடம்பில் உள்ள