பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 O அ. ச. ஞானசம்பந்தன்


அழகான பொருளைக் கண்டு எழுதுகிறார் திருக்குறளுக்கு உரை கண்ட பரிமேலழகர். மனிதன் தன்னுடைய நிலையினின்று தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு தேர்ந்துழி உயிர் வாழாமையும் மானமாம். எனவே, பிறன் ஒருவன், நாய் என்று ஏசியபொழுது உண்மையில் மானம் போய்விடவில்லை. ஆனால், அவ்வாறு சொன்ன மனிதனுடன், சொல்லப் பெற்றவன் சண்டைக்குப் போகும் பொழுதுதான், தன்னுடைய மானத்தை இழக்கின்றான். பிறன் ஒருவனுடன் சண்டையிடும் பொழுது மனிதன் மனிதத் தன்மையிலிருந்து தாழ்ந்துவிடுகின்றான். அதனாலேதான் மானத்தை இழப்பதாகக் கூறுகின்றோம்.

குறள் கூறுகின்ற முறையில் மானத்தை இழக்காமல் வாழ்ந்தவர்கள் நிரம்ப உண்டு- இந் நாட்டிலும் பிற நாட்டிலுங் கூட.

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவன் சேர மன்னன். தமிழ் வளர்ப்பதிலும் வீரத்துடன் வாழ்ந்த நிலையிலும் தமிழ்நாட்டு முடியுடை வேந்தர் மூவரும் சம மதிப்பு உடையவர். இன்று 'கேரளம்’ என்ற தனிப் பெயர் தாங்கி நிற்கும் அந் நிலப்பகுதி, ஒரு காலத்துத் தமிழ்நாடாய் இருந்தது. அப்பொழுது 'மலையாளம்’ என்றதொரு தனி மொழி இல்லை. கேரளம் என்ற மலையாளச் சொல்கூடச் 'சேரன்' 'சேரலன்’ என்ற தமிழ்ச் சொற்களின் சிதைவேயாகும்.

இச் சேரமான் இரும்பொறை சிறந்த தமிழ்ப் புலவன், கவிஞனுங் கூட. சேரர் பரம்பரையில் கவிஞராய் இருந்த அரசர் பலர். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள், இவ்வரசக் கவிஞருள் முடி மணி போன்றவர். சேரமான் இரும்பொறை ஒரு முறை சோழன் செங்கணான் என்பவனோடு அறப்போர் தொடுத்தான்.

அரசனாய் இருக்கும் ஒருவன், பல காரணங்களால் போர் புரிதல் அறம் எனக் கருதப்பெற்றது அந்த நாளில்.