பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 7


பயன்படுத்தி வாழ்வது என்பது என்ன? அறிவு, சிந்தனை, கொள்கை, குறிக்கோள் (லட்சியம்) முதலியவற்றோடு வாழ்பவனே மனிதனாய் வாழ்பவன் என்று பெரியோர் களால் மதிக்கப்படுவான். அனைத்தையும் சேர்த்துக் கூற வேண்டுமாயின், மானத்துடன் வாழும் வாழ்க்கையே மனித வாழ்க்கையாம் என்று கூறலாம்.

மானம் என்ற சொல்லின் பொருள் யாது? இன்று நம்மில் பலரும் இச் சொல்லை எளிதாகப் பயன்படுத்து கின்றோம். ஒருவனை மற்றொருவன் நாய் என்று கூறி விட்டால், கூறப்பட்டவன் தன்னுடைய மானம் போய் விட்டதாகக் கருதுகிறான்; அதனைப் போக்கிக்கொள்ள ஒரு போராட்டமே நடத்தத் தயாராகிவிடுகிறான். நாய் என்று மற்றவனைப் பேசியவனும், மற்றவனுடைய மானத்தைப் போக்கிவிட்டதாகக் கருதிக்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றான்.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், ஒருவனை நாய்’ என்று கூறுதல் இழிவுபடுத்துவதாகுமா? நாயின் பெருமையை நாலடியார் விரிவாகப் பேசுகின்றது. நாயி னுடைய நன்றி அறியும் சிறப்பைக் கூற வந்த நாலடியார், “நாய் அணையார் கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும்’ என்று கூறிவிட்டு, அதற்குக் காரணமும் கூறுகின்றது. நாய் போன்றவர் நட்பு வேண்டுமாம். ஏன் தெரியுமா? “எறித்த வேல் மெய்யதா வால் குழைக்கும் நாய்’ என்கிறது நாலடியார். அதாவது, தன்னை வளர்த்தவன் கோபத் தால் வேலாயுதத்தைத் தன்மேலே எறிந்தாலும் அதற்காகக் கோபிக்காமல் வாலைக் குழைத்துக்கொண்டு தன் அன்பை வெளியிடுமாம். அப்படி இருக்க, நாய்” என்று கூறினால், மானம் போய்விட்டதாக நினைப்பது எவ்வளவு தவறு?

உண்மையில் ‘மானம்’ என்பது யாது? குறளும் இச் சொல்லை நன்கு பயன்படுத்துகின்றது. இச் சொல்லுக்கு