பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 O அ. ச. ஞானசம்பந்தன்


ஒன்று. மனிதனை மகாத்துமாவாகச் செய்வதும் பேச்சுத் தான்; துராத்துமாவாக மாற்றுவதும் பேச்சுத்தான். ஒருவன் எவ்வளவு கற்றிருந்தாலும் பயன் இல்லை, தன் கல்வியைச் சொல் மூலம் வெளியிட முடியாதிருப்பின். ஒருவன் கருத்தைப் பிறர் அறியச் செய்வது சொல்லே யாதலின், அதன் பெருமை அளவிடற்கரியதாகும். நல்ல சொல்லைச் சந்தர்ப்பம் அறிந்து சொல்ல வல்லவர்களைச் 'சொற் செல்வம் உடையவர்’ என நம்மவர் கூறினர்.

அனுமனைச் 'சொல்லின் செல்வன்’ என இராமன் கூறுகிறான். அனுமனுக்கு இராமன் இப்பட்டத்தைச் சூட்டும்படி செய்கின்றவன் கம்பநாடன். கம்பன் எங்கிருந்து கற்றான் இதனை? ஏன், தமிழ்ப் பெருங் கவிஞர் அனைவருமே தேடிச் செல்லும் கருவூலமாகிய திருக்குறளிலிருந்துதான். திருக்குறளை அடியொற்றியும், சில குறள்களுக்கு விளக்கமாகவும் சிலருடைய வாழ்வு அமைந்தது, அந்த அழகிய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டின இலக்கியங்கள். இவற்றையெல்லாம் நன்கு கற்றுத்தெளிந்த கம்பநாடன் தன் பெருங்காப்பியத்தில் இவற்றை நன்கு பயன்படுத்தினான்.

குறள் கண்ட வாழ்வை வாழ்ந்தவர் நம் முன்னோருள் பலர். சிலர் குறள் எதனை ஆகாது என்று கூறிற்றோ, அவ்வாறு வாழ்ந்தனர். கூடாது என்று கூறியபடி வாழ்ந்தவர்களும் நமக்கு எடுத்துக்காட்டாக அம்ை கின்றனர். எவ்வாறு இவ்வாறு வாழ்ந்தால் இந்த முடிவு தான் கிடைக்கும் என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன அல்லவா இவர்களுடைய வாழ்வுகளும் தாழ்வுகளும்?

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கண்ணகி காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னன். பொற்கைப் பாண்டியன் மரபில் வந்த அப்பெருமகன் சிறந்த மன்னன்; பெருவீரன். செங்கோல் முறை தவறாதவன். சோமசுந்தரப் பெருமானே மருமகனாக வரக்கூடிய தவஞ் செய்த பெரு மரபில் தோன்றியவன்தான்