பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 19


அவன். கல்வியில் குறைந்தவனா? அன்றிக் கேள்விச் செல்வத்தில்தான் குறைந்தவனா? இரண்டிலும் மேம்பட்டவனே அவன். என்றாலும், என்ன! ஒரு குறளை மறந்ததன் விளைவு என்ன ஆயிற்று?

அரசர்கட்கே உரிய முறையில் நாட்டிய மகளிரின் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் களித்துக் கொண்டிருந்தான் நெடுஞ்செழியன். உடன் அவனுடைய பட்டத்தரசியும் இருந்து நாட்டியத்தைக் கண்டு களித்தாள். கலையை அனுபவிப்பவர்களிலும் இரு வகையினர் உண்டல்லவா? கலையை மட்டும் அனுபவிக்கும் பண்பு உடையவர் சிலர்; கலைஞர்களைக் கண்டு அனுபவிக்கும் பண்புடையவர் பலர். பாண்டியன் இரண்டாம் வகையினரைச் சேரத் தலைப்பட்டான். ஒர் ஆடவன் மனம் வேறுபடுவதை அவன் அறிவதன் முன்னரே ஒரு பெண் அறிந்து கொள்வாள். அரசன் உறுதி ஆட்டங் கண்டு விட்டதை அரசி உடனே கண்டுகொண்டாள்; திடீரென்று தனக்குத் தலை நோவு வந்து விட்டதாகக் கூறிக் கொண்டே அந்தப்புரம் சென்றுவிட்டாள்.

அரசி தலை நோவு என்று கூறிக் கொண்டு சென்றாலும், அவள் கோபத்துடன் போய் விட்டாள் என்பதை அரசன் அறிந்து, அவள் கோபத்தை எவ்வாறாயினும் தணிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அந்தப்புரத்திற்குப் புறப்பட்டான். அவன் செல்லும் வழியில் பொற்கொல்லன் எதிர்ப்பட்டுக் கீழே வீழ்ந்து வணங்கினான்; 'முன்னர் அரண்மனையில் களவு போன தேவியின் காற்சிலம்பு இப்பொழுது அகப்பட்டுவிட்டது! சிலம்பைத் திருடிய கள்வனை என் வீட்டில் வைத்திருக்கிறேன்!' என்றான். உடனே பாண்டியன், 'இந்தச் சிலம்பு இப்பொழுது கிடைத்தால் அரசியின் சினத்தைத் தணிக்க உதவுமே!’ என்று நினைத்துவிட்டான்.

அரச பரம்பரையில் பிறந்து, அதிலேயே வளர்ந்து அரசனான அவன், ஒருவன் சொல்வதை அப்படியே