பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 O அ. ச. ஞானசம்பந்தன்


நம்புவது எவ்வளவு தீமை விளைக்குமென்பதை அறிந்திருக்கவேண்டும்! அதுதான் போகின்றது என்றாலும், வாய் திறந்து அந்த அவசரத்தில் ஒன்றுஞ் சொல்வி இருத்தல் கூடாது. 'எதைக் காவாமல் விட்டாலும் தவறு இல்லை; ஒருவன் நாவைக் காக்கவேண்டும். அல்லாவிடின் மிகுதியும் துன்பமடைவான்,’ என்ற பொருளில்,

யா காவாராயினும் கா காக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு‘

என்றல்லவா குறள் கூறுகின்றது?

அதையாவது நினைத்துப் பார்த்தானா அவன்? சிறிதும் ஆராயாமல் வாய் திறந்துவிட்டான் மன்னவன். வாயைத் திறந்தாலும் எவ்வளவு கொடுமையான சொற்கள் வெளிப்பட்டன. அவ்வாயிலிருந்து! அவன் ஊர் காப்பாளரைக் கூவி,

ஈங்கு என்
தாழ் பூங்கோதை தன்-கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு ”

என்றல்லவா கூறிவிட்டான்? சேவகர்களை அழைத்து, "சென்று, என் அரசியின் கால் சிலம்பு அக்கள்வன் கையில் இருக்குமானால் அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக" என்றானாம். அரசன் நீதி வழங்கும் முறையா இது? உண்மையில் அரசன் கூற வந்தது இதுவன்று! 'கொல்ல வேண்டி அவனையும் சிலம்பையும் கொணர்க,' என்று கூற வந்தவன், சொல்லில் தடுமாற்றம் ஏற்பட்டுக் 'கொன்று' என்று கூறிவிட்டான். ஒன்றைச் சொல்லக் கருதிக்கொண்டு வேறு ஒரு வார்த்தையைக் கூறுவது அனைவருக்கும் இயல்புதான், இதனைத்தான் குறள் 'சொல் சோர்வு’ என்று குறிப்பிடுகின்றது.