பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 O அ. ச. ஞானசம்பந்தன்


பூசலார், தாம் கோயில் கட்டியது அரசனுக்கு எவ்வாறு தெரிந்தது என்று வினவினார். அரசன் நடந்தவற்றைக் கூறினான். இறைவன் தம்பால் காட்டிய கருணையை வியந்த பூசலார், தாம் மனத்திலேயே கோயில் கட்டிய வரலாற்றை எடுத்து உரைத்தார். உண்மையை உணர்ந்த மன்னன், அவரை வணங்கி விடை கொண்டான். அவ் வரசனை ‘அசரீரி கேட்டவன்’ என்று கல் வெட்டுக்கள் கூறுகின்றன.

இந்த வரலாற்றினால் அறியப்படும் உண்மை ஒன்றுண்டு: எவ்வளவு பெரிய கோயிலைக் கட்டினாலும், அதனை ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்தாலும், 'நான் தான் அதனைச் செய்தேன்!’ என்ற துளி அகங்காரம் அரசன் மனத்தில் ஒட்டிக்கொண்டிருந்தமையின் அவன் கட்டிய கோயில் இறைவன் குடி இருக்கத் தகுதி இல்லாத தாகிவிட்டது. தூய்மையான மனத்துடன் செய்யப் படுவனவே ‘அறம்’ என்று கூறுகின்றது குறள். மனத் தூய்மை இல்லாமல் எவ்வளவு பெரிய அறத்தைச் செய்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை. அது வெற்று ஆடம்பரத்தின் பாற்படும். இதே கருத்தைத் தான்,

மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர பிற"

என்ற குறள் தெரிவிக்கின்றது. 'நான் செய்தேன்!' என்ற அகங்காரத்துடன் கட்டிய கோயில் ஆடம்பரமாய் நின்று விட்டது. இதே கருத்தை வைணவர்கள், எல்லாவற்றையும் விட்டு, விட்டேன் என்ற எண்ணத்தையும் விடு,” என்று அழகாகக் கூறுவார்கள். குறள் கண்ட வாழ்வு வாழ்ந்த பூசலார் கட்டிய கோயில் இன்றும் நாம் அறிய நிலைத்துள்ளது.