பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. கொடைக் கலை

‘எத்தனையோ கலைகளை நாம் கேள்விப்பட்டது உண்டு; ஆனால், கொடையும் ஒரு கலையா?’ என்று கேட்கத் தோன்றுகின்றதா? ஆம்! கொடையும் ஒரு கலைதான். எப்படிக் கலைகள் ஒரு சிலருக்கு மட்டுமே முடிவதாக உள்ளதோ அப்படியே கொடையும் ஒரு சிலருக்கே முடியும். கொடை என்பது என்ன? இன்னார் இனியார் என்று பாராமல் வேண்டினவர்கட்கெல்லாம் வேண்டினவற்றை வாரி வழங்குவதே கொடை என்று கூறப்பெறும்.

கொடுத்தல்தான் கொடை என்றால், உலகத்தில் வாழும் அனைவரையும் கொடையாளிகள் என்று கூறி விடலாமா? கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இந்த உலகம் ஒரு நாள் கூட வாழ முடியாது. அன்றாடக் கூலி பெற்று வாழ்க்கை நடத்தும் ஒருவனில் தொடங்கி, பெரிய செல்வம் கொழிக்கும் அமெரிக்க அரசாங்கம் வரை கொடுக்கல் வாங்கல் இல்லாமல் வாழ முடியவில்லை. அப்படியானால், இவர் அனைவரையும் கொடையாளிகள் என்று ஏன் கூறக்கூடாது?

கொடுப்பதை மட்டும் கொடை என்று நம்மவர் கூறவில்லை. யாருக்குக் கொடுக்கின்றான் என்பதைப் பார்த்த பிறகே ஒருவனைக் கொடையாளி என்று கூறினார்கள். இது பற்றிக் கூற வந்த குறள் 'வறியர்க்கு