பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 O அ. ச. ஞானசம்பந்தன்


ஒன்று ஈவதே ஈகை’ என்று கடுமையாகக் கூறுகின்றது. 'எக்காலத்திலும், எந்த வகையிலும் இவர்களால் நாம் தருவதைத் திருப்பித் தரமுடியாது, என்று அறிந்திருந்தும் தருகின்றார் ஒருவர். அப்படியானால், அவரைக் கொடையாளி என்று கூறலாமா? இன்னும் ஒரு பரீட்சை வைத்து, அதிலும் தேறியவர்களையே இப்பட்டத்திற்கு உரியவர்களாக்குகின்றது தமிழ் வறியவர்க்குத்தான் கொடுக்கின்றார். ஆனால் எதனை? தம்மிடம் அதிகப்படியாக உள்ளவற்றையும், வேண்டாதவற்றையும் தமக்குப் பயன்படாதவற்றையும் தருபவரும் உண்டு, அழுகிப்போன பழத்தையும், புளித்துப்போன பாலையும் 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லிக்கொண்டு தொட்டியில் போடும் இந்த நாட்டில், மேலே கூறிய முறையில் தருபவர் இருப்பதில் புதுமை இல்லை.

எனவே, கொடையாளிகள் என்று யாரைக் கூறலாம்? மிகவும் வறியவர்கட்கு மிகவும் உயர்ந்த பொருளையும் மிகவும் தேவையான பொருளையும் தருவதே கொடை. எவ்வளவு விந்தையானது மனித வாழ்க்கை என்பது தெரிந்தால், இது எவ்வளவு கடினமானது என்பதும் விளங்கும். சாப்பாட்டிற்கு ஒரு தொல்லையும் இல்லாதவர்களைத்தான் விருந்துக்கு அழைக்கின்றோம். வருபவர்கள் காரில் வந்து இறங்குபவர்களாய் இருந்தால் விருந்தின் அளவும் தரமும் மிகவும் உயர்ந்துவிடுகின்றன. இவ்வளவு சிரமத்துடன் விருந்து சமைத்தாலும் அந்தக் காரில் வரும் விருந்தினர் இதனை விரும்பி உண்கின்றனரா? அவர்கள் புளி ஏப்பமும் அசீரணமும் உடையவர்கள். அவர்கட்குச் செய்யப்படும் உபசாரம் வீணானது. அதே நேரத்தில் பழைய சோற்றுக்கு ஆலாய்ப் பறந்து கொண்டு, தொண்டை கிழியக் கதறுகின்றவர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. அப்படிக் கதறிக்கொண்டு வருகின்றவர்கட்கு எத்தனை பேர் விருந்து அளிக்கின்றனர்?