பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 37


இப்படிப் புளி ஏப்பம் விடுகின்றவர்க்கு உபசாரம் செய்கின்றவர் பலர் உண்டு. அவர்களைப் பார்த்துப் பெரிய 'தர்மிஷ்டர்’ என்று வாய் கூசாமல் நாம் பட்டம் கொடுக்கிறோம். உண்மையில் அவர்களால் எக்காலத்தும் எவ்விதத்திலும் திருப்பித் தர முடியாது என்று அறிந்தும், தந்தவர்களையே 'கொடையாளர்’ என்று குறிப்பிட வேண்டும்.

இப்படிப்பட்டவர்கட்குத் தருவதிலும் எதனைத் தருவது என்ற பிரச்சினை எழும். உயிரையே தர வேண்டி நேரிட்டாலும் மனம் உவந்து கொடுப்பவர்கட்குத் தமிழர் ஒர் அழகிய பட்டத்தைச் சூட்டினர். அதுதான் 'வள்ளல்' என்னும் பட்டம். பாரி, சிபி போன்றவர்களை 'வள்ளல்கள்' என்று குறிப்பிட்டனர். பாரி, கொழு கொம்பு இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரை அளித்ததை உலகம் நன்கு அறியும். இதைவிடச் சிறந்த செயல், தன் உயிரையே வேண்டும் என்று இரந்த மூவேந்தர்கட்கு உயிரையே தந்துவிட்ட அந்தப் பெருவள்ளல் செயல்.

பாரி வாழ்ந்த இத்தமிழ்நாட்டின் மற்றொரு மூலை கயில் 'அதியமான் நெடுமான் அஞ்சி’ என்ற மற்றொரு வள்ளலும் வாழ்ந்தான். தன் பெயரைப் போலவே பெரிய மனமும் படைத்தவன் அப்பெரு வள்ளல். அவனுடைய நாடு மலைநாடு. அந்த மலைப் பகுதியில் ஒரு பயங்கரமான பள்ளத்தாக்கில் சிறந்த நெல்லி மரம் ஒன்று இருந்தது. பொதுவாகவே நெல்லிக்காய் மிகச் சிறந்த பயனை அளிக்கக் கூடிய ஒன்று. அதிலும் மலையில் வளரும் நெல்லி மிகவும் பயன் உடையது. அதியமானின் நாட்டில் தழைத்திருந்த அந்த அதிசய நெல்லி மரம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு பழந்தான் பழுக்கும். மரத்தின் சாரம் முழுவதும் அந்த ஒரே பழத்தில் இறங்கியதனாலோ ஏதோ, அந்தப் பழம் மிகவும் சிறந்ததாய் அமைந்திருந்தது. அந்தப் பழத்தை உண்ட