பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 O அ. ச. ஞானசம்பந்தன்


அதியமான் வள்ளல் ஆகலின் வந்தவர்கட்கெல்லாம் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தான். அதனால் அவனுடைய செல்வ நிலைமை சற்றுத் தளர்ந்திருந்தது ஒரு சமயம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் தொண்டைமான். உடனே படை யெடுத்து வந்து அதியமானுடன் போர் தொடுக்கச் சித்தமாகி விட்டான்.

இந்த நிலையில் அதியன் போருக்குத் தயாராய் இல்லை. அதற்காகக் கோழையைப் போல நாட்டை விட்டுவிட்டு ஒடி விடுவதும் முறையன்று. பகைவனுக்குப் பணிந்து போவதும் சரியன்று. என்ன செய்வான் அதியன்! தொண்டைமானுடன் சமாதானம் செய்து கொள்ளவே விரும்பினான்.

போர் தொடுக்கச் சித்தமாய் இருக்கும் பகைவனுடன் சமாதானம் செய்து கொள்வது என்பது எளிதான காரியமா? அவ்வாறு செய்து கொள்ள முயல்வதில் இரண்டு வகையான தொல்லைகள் உண்டு. உண்மையில், தான் போர் செய்ய முடியாது என்பதைத் தெரிவித்துச் சமாதானம் கேட்கலாம். இவ்வாறு செய்வதற்கும் போரில் தோல்வி அடைவதற்கும் அதிக வேறுபாடு இல்லை. இதற்கு எதிராகத் தன்னுடைய பலமின்மையைக் காட்டிக் கொள்ளாமலே சமாதானத்தை அடைய முயற்சி செய்யலாம். ஆனால், பகைவன் சமாதானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால், வந்தது ஆபத்து! இவை இரண்டு வழியிலும் சிக்காமல் சமாதானம் பெறுவது சிறப்புடையது. இம்முறை சிறப்புடையது என்றால், ஏன் இதனைக் கடைப்பிடித்தல் கூடாது? இம்முறையில் சமாதானம் செய்து வைப்பவர் கிடைத்தால் நன்றாகக் கடைப்பிடிக்கலாம். ஒரே ஒரு தொல்லைதான் உண்டு இம்முறையில். நன்மை நினைப்பவர்- அதாவது மனத் தால் தூயவர்- கிடைப்பது கடினம். இத்தகையவர் கிடைத்தால் இவர்கள் இன்சொல் பேசுபவர்களாகவும்