பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 43


உடையவர்கள்தாம் பிறருடைய நன்மையைக் கருத முடியும். ஆனால், எவ்வளவுதான் அகத்தூய்மை இருந்தாலும் பிறருக்கு நன்மை புரிய அவர்கள் தயாராக இருந்தாலும், பயன் என்ன? நன்மையைப் பெறுகின்ற பிறர் தங்களிடம் வரவும் தம்முடைய குறைகளை அச்ச மின்றி எடுத்துக் கூறவும் முடிந்தால்தானே பயன் ஏற்படும்?

இவ்வுண்மையை நன்கு அறிந்து கொண்டமையால் தான் குறள் 'இனியவை கூறல்' என்ற ஒர் அதிகாரமே! (பத்துக் குறள்கள்) வகுத்து விட்டது. உண்மையான அகத்துய்மை உடையவர்கள் எவ்வாறு பேசுவார்கள்? இனிய சொற்களையே பேசுவார்கள். அப்படியானால், அந்த இனிமை உதட்டளவில் நின்றுவிடுமா? நில்லாது. உண்மையான பரிவு அல்லது அன்பு கலந்ததாக இருக்கும் அவர்களுடைய சொல். ஒரு வேளை அன்புடையவர் போல நடித்தாலோ? இல்லை. வஞ்சகம் இல்லாததாகவும் இருக்கும் அவர்களுடைய சொல், இதையே குறள் ‘இன்சொலால் ஈரம் அளை இப் படிறு (வஞ்சகம்) இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்’ என்று கூறிச் செல்கின்றது.

இவ்வாறு வஞ்சகமில்லாத அன்புடன் இனிய சொற்களைக் கூறுகின்ற பெரியோர்கள் உலகிற்குச் செய்துள்ள. நன்மைகள் அளப்பில.

அதியமான் நெடுமான் அஞ்சி என்பவன் கடை எழு வள்ளல்களுள் ஒருவன். அவன் மிகப் பெரிய நாட்டை ஆளவில்லை. எனினும், தமிழ்நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன். அவன் காலத்தில் தமிழ் நாட்டின் மற்றொரு பகுதியை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் என்ற மற்றொரு சிற்றரசன். அந்த நாளில் தமிழ் நாட்டை ஆட்சி செய்த இந்தச் சிற்றரசர்களுள் சண்டைக்குக் கணக்கே இல்லை. ஓயாது ஒழியாது. போரிடுவதே இவர்கள் வழக்கமாய் இருந்தது.