பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 51


சோழன்’ என்று விடை கூறினார். சோழனும் தன்னைப் பிசிராந்தை என்று கூறத் தொடங்கி விட்டான்.

இந்நிலையில் சோழனுக்கு ஒரு தீமை நிகழ்ந்தது. அவன் பிள்ளைகளே படை சேர்த்துக்கொண்டு தந்தையின் மேல் படை எடுத்தார்கள். மக்களின் மமதையைப் போக்கச் சீறி எழுந்தான் சோழன். புல்லூர் எயிற்றியனார் என்ற புலவர் அவனைத் தடுத்தார். 'அவர்கள் அறியாமை யால் போர் தொடுத்தால் நீயும் புறப்படலாமா? அவர்கள் தோற்றுவிட்டால் இந்த அரசை யாருக்குத் தரப் போகிறாய்?' என்று அவர் எடுத்துக் கூறினவுடன் சோழன் மனம் மாறிவிட்டான்; ஆட்சிப் பீடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, வடக்கிருக்கப் புறப்பட்டு விட்டான். வாழ்வில் வெறுப்புற்றவர் வடக்கு முகமாக அமர்ந்து ஊண் உறக்கத்தை நீத்துக் கொஞ்சங் கொஞ்சமாக உயிரை விடுவர். இதையே 'வடக்கிருத்தல்’ என்று கூறினர் நம்மவர்.

சோழன் வடக்கிருக்க அமர்ந்தவுடன் தனக்குப் பக்கத்தே ஒர் இடம் விட்டு வைக்கக் கூறினான். உடன் இருந்த புலவர்களும் மற்றையோரும், 'யாருக்கு?’ என்று கேட்டார்கள். அரசன், ‘என் உயிர்த்தோழர் பிசிராந்தை யாருக்கு' என்றான். ‘நீ வடக்கிருப்பதை உன் நண்பர் அறியமாட்டார். உறையூரில் இருக்கும் உன் நிலையை மதுரையில் இருக்கும் உன் நண்பர் எவ்வாறு அறிய முடியும்?' என்று கேட்டார்கள். அதற்குச் சோழன், செல்வக் காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன் மன்னே, என்று கூறினான். அதாவது ‘யான் நன்றாகச் செல்வத்துடன் வாழ்ந்த காலத்தில் அவர் வரவில்லை என்பது உண்மைதான். ஆனால், உண்மை நண்பராகிய அவர், யான் துன்பப்படும் இப்பொழுது வாராமல் இருக்க மாட்டார்,’ என்ற பொருளில் அரசன் விடை கூறினான்.

என்ன அதிசயம்! பிசிராந்தையார், சோழனுடைய எண்ணம் பழுதாகாமல் வந்துவிட்டார்; சோழனுடன்