பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 O அ. ச. ஞானசம்பந்தன்


ஒருவன் ஏட்டைத் தானே கற்று அறிவு பெறுவதைக் காட்டிலும் கேள்வி ஞானத்தால் பெறும் அறிவைப் பெரிதும் போற்றினார்கள். ஏனென்றால், ஒருவன் குறள் போன்ற ஒரு நூலில் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் அதனை முற்றக் கற்றுவிட முடியாது. மேலும் எத்தனையோ அலுவல்களுக்கிடையே, எத்தனையோ வகை நூல்களின் இடையே குறளையும் ஒரு நூலாகவே கற்க முடியும். ஆனால், ஒருசிலர் பொதுவான கல்வியை ஓரளவு பெற்றுவிட்டுப் பிறகு குறள் போன்ற ஒரு நூலை முற்றிலும் கற்பதிலேயே தம்முடைய காலம் முழுவதையும் செலவழிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய ஒருவர் குறளைப் பற்றி எடுத்துக் கூறும் பொழுது பல காலமாகத் தாம் அதில் உழைத்துக் கண்ட பேருண்மைகளையெல்லாம் மிகச் சுருங்கிய கால அளவில், மிக எளிதாக நாம் அறிந்து கொள்ளுமாறு தந்துவிடுவார் அல்லரோ? எவ்வளவோ காலம் நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்க வேண்டிய ஒன்றைச் சுலபமாக ஒருவர் நம்முடைய கையில் கொடுத்து விட்டால், எவ்வளவு எளிதாக அதனை நாம் பயன்படுத்தலாம்? இதனாலேதான் நம்முடைய நாட்டில் "கற்றலின் கேட்டலே நன்று,” என்ற முதுமொழியும் தோன்றியது.

பல்வேறு வகைப்பட்ட கல்வியும் விஞ்ஞான வளர்ச்சியும் மிகுதிப்பட்டுக்கொண்டே செல்லுகின்ற இந்த நாட்களில், இம் முதுமொழியின் உண்மையை நாம் நன்கு அறிய முடியும். பழைய காலத்தில் மருத்துவர்கள் ன்ன்றால் ஏறத்தாழ எல்லா வகையான நோய்களுக்கும் மருந்து கொடுப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால், இன்றோ, எதை எடுத்துக்கொண்டாலும் பிரத்தியேக அறிவு பெற்றவர்கள் (ஸ்பெஷலிஸ்ட்ஸ்) காது, கண் முதலிய ஒவ்வோர் உறுப்பையும் கவனித்துக் கொள்பவர் களாக இருக்கக் காண்கிறோம். எனவே, கல்வியின் வளர்ச்சி பெருகிக்கொண்டே போகின்ற இதுபோன்ற