பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 O அ. ச. ஞானசம்பந்தன்


உயர்ந்த நட்பின் பண்பாட்டோடு விளங்கிய துரியோத னுக்கு நன்றி பாராட்ட வேண்டுமென்பது ஒரு காரணம். இரண்டாவது காரணம் அதைவிட முக்கியமான, ஊர் பேர் தெரியாத தன்னை உணவு கொடுத்து மனிதனாக்கிய உபகாரத்திற்கு நன்றி பாராட்ட வேண்டும் என்பது மிக இன்றியமையாதது. இதனையே, "செஞ்சோற்றுக்கடன் கழிப்பது" என்று கூறுகிறான் கர்ணன்.

போர்க்களத்தில் வந்து நிற்கும் கும்பகர்ணனைத் தன்னுடன் வந்து விடுமாறு அழைக்கின்றான் வீடணன். இராவணன் செய்வது பெருந்தவறு என்பதை நன்கு அறிந்தவனாயினும், நன்றிப் பெருக்கம் உடைய கும்பகர்ணன், வீடணனோடு சேர்ந்து கொண்டு இராவணனுக்கு எதிராகப் போரிட விரும்பவில்லை. எனவே, வீடணனை நோக்கி, "தம்பி, அறிவில்லாதவனாகிய அரசன் தீமை செய்வதைக் கண்டால் அவனை இடித்துக் கூறித் திருத்த முற்படவேண்டும். திருத்த முடியவில்லையானால், அதற்காகப் பொறுத்துக் கொண்டிருப்பதோ அன்றிப் பகைவனுடன் சேர்ந்து கொண்டு அண்ணன் மேல் போர் தொடுப்பதோ முறையன்று. போருக்குச் சென்று உயிரை விடுதலே அவனுடைய உப்பைத் தின்றவர்கள் செய்ய வேண்டிய கடமையாகும்," என்ற பொருளில் கூறுகின்றான்:

கருத்து இலா இறைவன் தீமை
கருதினால், அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகில் கன்றே!
திருத்துதல் தீராது ஆயின்
பொருத்து உறுபொருள் உண்டாமோ?
பொருதொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவற்கு உரியது அம்மா!"