பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 69


சிறந்த வரவேற்பை எதிர்பார்க்க முடியும்? உள்ளே இருப்பவர்கள் யார் என்பதை அறிவுறுத்தும் பலகைக்குப் பதிலாக இப்பலகையைக் கண்டு சந்தேகத்துடன் மெல்ல உள்ளே நுழையப் பார்க்கின்ற உங்களைக் காவலாளி தடுத்து நிறுத்திவிடுவான். எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும், இறுதியில் பெரிய மனிதரைக் காண்பது குதிரைக் கொம்பாகவே முடியும்.

இத்தகைய ஒரு நிலையை நன்கு உணர்ந்ததனால் போலும் மனுநீதிச் சோழன் ஒரு புதிய வழியைக் கையாண்டான்! "குடிமக்கள் அனைவரும் என்னை வந்து எப்பொழுது வேண்டுமானாலும் கண்டு தம் குறைகளை எடுத்துச் சொல்லலாம்," என்று கட்டளை இட்டாலும் போதாது. ஏனென்றால், காண உள்ளே செல்பவர் களைத் தடை செய்ய எத்தனையோ பேர் இருப்பார்கள் என்பதை அறிந்த அவன், அரண்மனையின் வாயிலில் ஒரு மணியைக் கட்டித் தொங்கவிட்டான். குறை உடைய வர்கள் யாருடைய தயவையும் எதிர்பாராமல் அம்மணியை அடித்தால், மன்னன் வெளியே வந்து அவர்கள் குறையைக் கேட்டு அறிந்து தீர்க்க முடியும்.

செங்கோல் மன்னனாகிய அவன் கட்டிய மணி அடிப்பாரின்றிப் பல காலம் உறங்கியது. மனுநீதிச் சோழ லுக்கு, குலத்தை விளக்க ஒரே ஒரு மகன் இருந்தான். அளவில்லாத கலை ஞானத்தைக் கற்ற அவன், தந்தைக்கு ஏற்ற மைந்தனாய்ப் பண்பாடு மிக்கவனாய் இருந்தான்.

ஒரு நாள் அந்த அருமை மைந்தன் மணிகள் கட்டிய பெரிய தேரின்மேல் ஏறிக்கொண்டு, அரசர்கள் உலாவப் போகின்ற பெரிய வீதியிலே சென்று கொண்டிருந்தான். நால்வகைப் படைகளும் அவனைச் சூழ்ந்து சென்றன. எதிர்பாராத நிகழ்ச்சிகளே நடைபெறுகின்ற இயல்பை உடையது இவ்வுலகம். சிற்றுலாப் புறப்பட்ட அரச குமாரன் எவ்வகையான தீங்கும் நேரும் என்று எதிர் பார்க்கவே இல்லை. ஆனாலும், என்ன புதுமை!