பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 73


கொல்வதே முறையாகும். இந்தப் பசு மனம் அழிந்து வருந்தும் துயரத்தைப் போக்க முடியாத யானும் இப்பசு அனுபவிக்கும் துயரை அனுபவிப்பதே அறமாகும்," என்ற கருத்தைக் கூறினான்.

என மொழிந்து 'மற்று இதனுக்கு இனி இதுவே செயல்! இவ் ஆன்
மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன், வருந்தும் இது
தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம்,’ என
அனகன் அரும்பொருள் துணிந்தான்; அமைச்சரும்அஞ்சினர், அகன்றார்!"

பிறர் படும் துயரத்தைப் போக்க முடியாத ஒருவன், அவ்வுயிரின் துயரத்தைத் தானும் ஏற்று அனுபவித்தால் ஒழிய, ஒருவன் தன்னை மெய்யறிவுடையவன் என்று கூறிக்கொள்ள முடியாது என்பதே குறள் காட்டும் வாழ்க்கை நெறி. இதை மறந்துவிட்டு எவற்றை எல்லாமோ நாம் இன்று 'அறிவு' என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம் "மற்றோர் உயிரின் நோயைத் தன் நோய் போலப் போற்றி அனுபவிக்காவிட்டால், அறிவு பெற்றதனால் பயன் என்ன?" என்னும் பொருளில்,

அறிவினால் ஆகுவது உண்டோ ? பிறிதின் நோய்
தன் நோய்போல் போற்றாக் கடை ?"

என்று கூறுகிறது குறள்.

குறள் கூறும் ஒப்பற்ற குறிக்கோள் வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகும் மனுநீதிச் சோழன் தன்னுடைய ஒரே மகனை அதே தேர்க்காலின் கீழே கிடத்தி, அவன் மீது தேரைச் செலுத்தி முறை செய்தான்; கன்றை இழந்த பசுவைப் போலத் தானும் மகனை இழந்து துயர் அடைந்தான். இவ்வாறு செய்ததாலேயே அவனுக்கு இயற்பெயர் மறைய, மனுநீதி கண்ட சோழன் என்னும் காரணப்பெயர் நிலைத்துவிட்டது.