பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 O அ. ச. ஞானசம்பந்தன்


எந்த உறுப்பில் வலி ஏற்பட்டாலும் கண்ணிரைச் சொரிந்து அழும் உறுப்புக் கண்ணே அன்றோ? தனக்கு வலி இல்லை, ஆகவே தான் வருந்த வேண்டா என்று கண் நினைப்பது இல்லையே! பிற உயிர்கள் படுகின்ற துயரத்தைக் கண்டு வருந்தாதவன் அறிவுடையவன் ஆக மாட்டான். பல சமயங்களில் பிறர் படுகின்ற துன்பத்தைப் பார்த்து, "ஐயோ பாவம்! சகிக்க முடியவில்லை!” என்றெல்லாம் பேசுகிறோம். அந்த உயிர்களினுடைய துன்பத்தைப் போக்க முயல்வதுதான் அறிவுடையவன் செய்ய வேண்டிய கடமையாகும்.

"என்னால் முடிந்த அளவு பார்த்தேன். அதனைப் போக்கும் சக்தி என்னிடத்தில் இல்லை. நான் என்ன செய்ய முடியும்!" என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முயலலாம் அல்லவா?

ஆனால், வள்ளுவர் இவ்வாறு சொல்லித் தப்பித்துக் கொள்ள இயலாத வழியைக் கூறுகிறார். பிறருடைய துன்பத்தை ஒருவன் தன்னுடைய துன்பம் போல நினைக்க வேண்டும் என்றோ, சொல்ல வேண்டும் என்றோ வள்ளுவர் கூறவில்லை. அதற்குப் பதிலாகத் தன்னுடைய துன்பம்போலப் போற்றவேண்டும் என்று கூறுகிறார். அதாவது, தனக்கு நேர்ந்துவிட்டால் எவ்வாறு ஒருவன் எல்லா முயற்சிகளையும் செய்து அதனைப் போக்க முயல்கிறானோ, அவ்வளவு முயன்று பார்க்கவேண்டும். துன்பத்தைப் போக்க முடியவில்லையானால் அதனை அனுபவித்துத்தானே தீர்க்கின்றான்? அதேபோலப் பிறர் படும் துயரத்தைப் போக்க முடியவில்லையானால், முடியவில்லை என்று வாளா இருந்துவிடாமல் அத்துயரைத் தானும் பங்கிட்டு அனுபவிக்க வேண்டும். இதுவே குறள் கூறும் முறை.

இந்தக் குறளை மனத்திற்கொண்ட மனுநீதிச் சோழன், “எந்த உயிரையும் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை. அவ்வாறு கொன்றால், அவனைக்