பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 71


புரியாதவனாய், "மன்னுயிர்களை எல்லாம் காத்து அறவழி ஆட்சி செய்ய வேண்டிய என்னாலேயே இக்கொடுமை நிகழ்ந்தது என்றால், என்ன செய்து இப் பழியைப் போக்கிக்கொள்ள முடியும்?" என்று வருந்தத் தொடங்கினான்.

மன்னவன் துயரத்தைக் கண்ட அமைச்சர்கள் அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி, "அரசே, நீங்கள் சிந்தை மிக நொந்து வருந்துவதால் என்ன பயனைப் பெற முடியும்? பசு வதை செய்தவர்கள் செய்ய வேண்டிய கழுவாயைச் (பிராயச்சித்தம்) செய்ய உடனே ஏற்பாடு செய்வதே அறமாகும்," என்றார்கள். இந்த விடையைக் கேட்ட மன்னன், அமைச்சர்களின்மேல் சீறத் தொடங்கி விட்டான். "பசு வதை நடை பெற்றதற்குக் கழுவாய் தேடி, அதனால் மகனுடைய பாவத்தைப் போக்கி விடலாம் என்று நீங்கள் கூறுவது நகைப்பையே உண்டாக்குகிறது! அப்படிச் செய்துவிட்டால் இளைய கன்றை இறந்து வருந்தி அலறுகின்ற இத் தாய்ப்பசுவின் வருத்தத்துக்கு அது மருந்தாகிவிடுமா? என்னுடைய மகன் செய்த இக்கொலைக்குக் கழுவாய் தேடும் முறையைச் செய்துவிடலாம். ஆனால், இதே போன்ற ஒரு கொலையை அரசன் மைந்தன் அல்லாத மற்றொருவன் செய்துவிட்டால் அவனைப் பிடித்துக் கொலைக்குக் கொலை என்று சொல்லி அவன் உயிரை வாங்குவேனானால், என்னுடைய செங்கோல் முறைமை என்ன ஆகும்? ‘பழைய மனுவின் நீதி முறை இப்புதிய மனுவால் அழிக்கப்பட்டது!’ என்ற பழியை எனக்கு வாங்கித் தரும் நீங்களா அமைச்சர்கள்?" என்று கூறிக் கோபித்தான். அமைச்சர்கள் வார்த்தையை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

மனிதனுக்கு அறிவு என்னும் ஒன்றைத் தனிப்பட்ட முறையில் தந்துள்ளான் இறைவன். ஏனைய விலங்குகளுக்கு இல்லாத இந்த அறிவால் மனிதன் என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புகிறான்? உடம்பில்