பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 O அ. ச. ஞானசம்பந்தன்


எப்பொழுதும் ஒன்றை நினைக்கும் இயல்பு உடையது. அதை நினைக்காமல் தடுக்க நம்மால் முடியாது. அப்படி யானால், வேறு வழி என்ன? இன்னதைத்தான் நினைக்க வேண்டும் என்று சொல்லக்கூடவா நமக்கு உரிமை இல்லை? அம்முறையிலேதான் இந்த அடக்கத்தைச் செய்யவேண்டும்," என்பது.

மனத்துக்கும் குரங்குக்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. குரங்கு மரத்தின் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவுவதைப் பார்த்திருக்கலாம். தான் தங்கி புள்ள கிளையை விட்டுவிட்டு அடுத்த கிளைக்குத் தாவுகிறது. முதல் கிளையை விட்ட நேரத்திற்கும், இரண்டாவது கிளையைப் பற்றுகின்ற நேரத்திற்கும், இடைப்பட்ட நேரத்தில் ஒன்றையும் பற்றாமல் அக்குரங்கு வெட்ட வெளியிலேதான் சஞ்சரிக்கிறது. இந்த நேரம் ஒரு வினாடியாக இருப்பினுங்கூட இந்த நேரத்தில் அது ஒன்றையும் பற்றாமல் இருப்பது என்னவோ உண்மைதான்!

கேவலம் விலங்காகிய குரங்குக்குக்கூட ஒரு கண நேரம் ஒன்றையும் பற்றாமல் இருக்க முடிகிறது. ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கோ என்றால், ஒரு வினாடியில் நூற்றில் ஒரு பாகங்கூட ஒன்றையும் பற்றாமல், அதாவது நினைக்காமல், இருத்தல் இயலாத காரியம். அப்படியானால், மனத்தை அடக்குவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. ஏதாவது பலமான ஒன்றைப் பற்றிக்கொண்டால் ஒழிய, மனத்தில் உள்ள பற்றை, அதாவது ஆசையைப் போக்க முடியாது. இந்த உண்மையைக் குறள் புகட்டுவது போல வேறு எந்த நூலும் புகட்டவில்லை என்றுகூடச் சொல்லிவிடலாம்.

திருக்கடவூரிலே அபிராமி பட்டர் என்ற குருக்கள் ஒருவர் வாழ்ந்து வந்தார். மார்க்கண்டேயன் பொருட்டு யமனை உதைத்த பெருமானின் சக்தி வடிவாக அவ்வூரில்