பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 77


அபிராமித்தேவி இருக்கின்றாள். அந்த அம்பிகையிடம் தம் உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார் அபிராமி பட்டர். இறைவியின் திருவருளிலேயே தோய்ந்து தம்மை மறந்து வாழ்ந்து வந்த காரணத்தால், அபிராமி பட்டர் உலகச் சட்டம் ஒன்றையும் நினைத்ததில்லை. இதனால், அவரைப் பயித்தியக்காரர் என்றும், குடி முதலிய தீய பழக்கங்கள் உடையவர் என்றும் பழி சொல்ல ஊரார் அஞ்சவில்லை.

அப்பெரியவரின் காலத்தில் தஞ்சை மாவட்டத்தைப் பிரசித்தி பெற்ற சரபோஜி மன்னன் ஆட்சி செய்து வந்தான். தை அமாவாசையன்று சரபோஜி மன்னன் கடலாடுவதற்காகக் காவிரிப்பூம்பட்டினம் செல்லப் புறப்பட்டான்; வழியில் இருந்த திருக்கடவூரில் உள்ள காலனைக் காலால் உதைத்த பெருமானை வணங்க வேண்டும் என்று எண்ணித் திருக்கோயிலினுள் நுழைந்தான்; பெரிய மண்டபத்தின் ஒரு மூலையில் தூணின் அருகே ஒளி பொருந்திய முகத்தோடு அமர்ந்திருந்த, அபிராமி பட்டரைக் கண்டான். அவர் திருமுக அமைதியில் ஈடுபட்ட மன்னன், அவரை நெருங்கி, அளவளாவ விருப்பம் கொண்டான். 'இதுதான் சமயம்!' என்று கருதிப் பக்கத்திலிருந்தவர்கள், "அரசரே, இவரைப் பெரிய யோகி என்று நினைத்துவிட வேண்டா. இவர் வாம மார்க்கத்தவர்; மது மயக்கத்தால் இங்ஙனம் தம்மை மறந்த நிலையில் உள்ளார். நாங்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்றால், இந்த அபிராமி பட்டரைச் சாஸ்திர சம்பந்தமான கேள்வி ஒன்றைக் கேட்டுப் பாருங்கள்! பட்டர் குலத்தில் பிறந்தவராகிய இவர் சாஸ்திரம் கற்றிருக்க வேண்டாவா?" என்று கூறினார்கள்.

அவர்கள் கூற்றால் ஓரளவு மனம் மாறிய சரபோஜி மன்னன், "பெரியவரே, இன்று என்ன திதி" என்று. கேட்டான்.